ஐபிஎல் தொடருக்கு பெருகும் எதிர்ப்பு: தமிழர் அமைப்புகள் எச்சரிக்கை

Report Print Raju Raju in இந்தியா

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கு தமிழகத்தை சேர்ந்த சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா வரும் 7-ஆம் திகதி மும்பையில் தொடங்கவுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதல் போட்டி 10-ஆம் திகதி நடக்கிறது.

இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் இன்னும் அமைக்கப்படாத நிலையில் ஐபிஎல் போட்டிகள் சென்னையில் நடத்தக்கூடாது என அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இது குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறுகையில், நதிநீர் பங்கீடு பிரச்சினைகளில் தமிழக மக்களுக்கு மத்திய அரசு துரோகம் இழப்பதைக் கண்டிக்கும் விதத்திலும், அதற்காக மக்கள் உணர்வுடன் போராடிக் கொண்டிருக்கும் நிலையிலும் ஐபிஎல் போட்டிகளை தமிழகத்தில் நடத்தக்கூடாது.

இதையும் மீறி வரும் 10-ம் திகதி தமிழகத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் எங்களுடைய சொந்த பணத்தில் டிக்கெட் வாங்கி மைதானத்துக்குள் சென்று போராட்டத்தை நடத்துவோம் என கூறியுள்ளார்.

மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அளித்துள்ள பேட்டியில், சென்னையில் வருகின்ற 10-ம் திகதி ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை நடத்தக்கூடாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசிற்கு எதிராக தமிழக மக்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்நிலையில் கிரிக்கெட் போட்டி ஒரு கேடா? அப்படி நடத்தினால் அது தமிழ்நாட்டிற்கே வெட்கக்கேடு.

இதை மீறி அங்கு விளையாட வரும் ஐபிஎல் வீரர்களை சிறைபிடிப்போம். தமிழக மக்களின் உணர்வுகளை எல்லோரும் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறோம் என கூறியுள்ளார்.

பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அளித்துள்ள பேட்டியில், ஏப்ரல் 10-ஆம் திகதி சென்னையில் முதல் ஐபிஎல் போட்டி நடக்கிறது.

அன்றைய தினம் யாரும் போட்டியை நேரடியாக சென்று பார்க்காமல் இருந்தால் மைதானம் காலியாக தெரிந்தால் போதும் சர்வதேச கவனத்தை ஈர்க்கலாம்.

ஒரு 50,000 பேர் மட்டுமே செய்யும் இந்த தியாகம் 7 கோடி பேருக்கு உதவும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

இது தமிழ்நாட்டின் தலையாயப் பிரச்சனை. இது தமிழர்களின் பிரச்னை என தமிழகத்தில் வாழும் பிறமொழியினர் தவறாக புரிந்துகொள்ள வேண்டாம். நீங்களும் இதில் ஒத்துழைக்க வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்