மருமகள் சென்ற காரை தீயிட்டு கொளுத்திய மாமியார்: சிசிடிவியில் பதிவான காட்சி

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் மகன் வாங்கிய காரில் மருமகள் செல்வதை பொறுத்து கொள்ள முடியாத மாமியார் அந்த காரை தீயிட்டு கொளுத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆவடியில் உள்ள காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், இவருக்கு வைஜெயந்திமாலா என்ற மனைவி உள்ளார்.

மனைவிக்கும், தாயாரான இந்திராணிக்கும் இடையே தொடர்ந்து மாமியார், மருமகள் பிரச்சனை இருந்து வந்தால், ராஜேந்திரன் தன்னுடைய தாயை வேறொரு விட்டில் தனியாக குடி அமர்த்தியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் ராஜேந்திரன் ஹூண்டாய் ஐ 20 கார் வாங்கியுள்ளார், அதில் தனது மனைவியை கூப்பிட்டுக் கொண்டு வெளியில் சென்று வந்துள்ளார்.

இதைக் கண்ட இந்திராணி, மருமகள் காரில் செல்வதை பொறுத்துக் கொள்ள முடியாததால் ஒரு திட்டம் தீட்டியுள்ளார்.

அதன்படி மகன் வாங்கிய புது காரை மண்ணெண்ணை ஊற்றி கொளுத்தியுள்ளார், இதில் காரின் முன்பக்கம் முற்றிலும் எரிந்து சேதமடைந்துள்ளது.

இதை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், அங்கிருக்கும் சிசிடிவி கேமராவை ஆராய்ந்து பார்த்த போது இந்திராணி காரை கொளுத்துவதற்காக மண்ணெண்ணை கேனை எடுத்துச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.

அதன்பின் பொலிசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், விசாரணையின் போது மருமகள் காரில் செல்வதை பொறுத்துக் கொள்ள முடியாததால் தீயிட்டு கொளுத்தியதாக கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்