தொலைபேசி அழைப்பினால் களவு போன 90 ஆயிரம்: பின்னர் பெண்ணுக்கு ஏற்பட்ட சோகம்

Report Print Kabilan in இந்தியா
42Shares

சென்னையில், தொலைபேசியில் வங்கி அதிகாரிகள் போல பேசி, பெண்ணின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.90,000 திருடப்பட்ட சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண் மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அண்ணா நகரைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற கருவூல அதிகாரி ராஜேந்திரன். இவரின் மனைவி ஜெயலட்சுமிக்கு, கடந்த வெள்ளிக்கிழமை தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.

எதிர்முனையில் பேசிய நபர், தான் வங்கியிலிருந்து பேசுவதாகவும், ஜெயலட்சுமியின் ATM Card காலாவதியாகி விட்டதால் புதிய Card-ஐ வங்கியிலிருந்து வாங்கி தர உள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும், தற்போதைய Card-யில் உள்ள 16 இலக்க எண்களை கூறும்படி கேட்டுள்ளார். அவரின் பேச்சை நம்பிய ஜெயலட்சுமி, அந்த எண்ணைக் கூறியுள்ளார்.

அதன் பின்னர், உங்கள் கைப்பேசிக்கு வரும் OTP எண்ணையும் கூறும்படி கேட்டுள்ளார் அந்த நபர். இதனைத் தொடர்ந்து, OTP எண்ணையும் அவர் தெரிவித்துள்ளார். மறுகணமே அந்த தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

மறுநாள் வங்கிக்கு ஜெயலட்சுமி புதிய ATM Card-ஐ வாங்க சென்றபோது, அவரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.90 ஆயிரம் திருடு போனது தெரிய வந்துள்ளது.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஜெயலட்சுமி, வங்கியிலேயே நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அமர்ந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, உடனடியாக அவர் வங்கி அலுவலர்கள் மூலமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு ஒருநாள் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, ராஜேந்திரன் அளித்த புகாரின் பெயரில், திருமங்கலம் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில், அந்நபர்கள் உத்தரகாண்ட் மாநிலத்தில் இருந்து Call செய்ததாக தெரிய வந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்