தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் வெளிநாட்டு பெண்கள்

Report Print Kabilan in இந்தியா

ஸ்காட்லாந்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள், தமிழ்நாட்டின் பாரம்பரியத்தால் ஈர்க்கப்பட்டு விவசாயம் செய்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹன்னா ராஸ், க்ளோவி எலிசபெத் என்ற ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த இரண்டு பெண்கள், விடுமுறைக்காக இந்தியா வந்துள்ளனர்.

தமிழர்களின் கலாச்சாரமும், பண்பாடும் இவர்களை கவரவே, தாங்களும் அந்த கலாச்சாரத்திற்கு மாறியுள்ளனர். தமிழ் பெண்களைப் போல புடவை அணிந்து, நெற்றியில் பொட்டு வைத்து, காலில் கொலுசு அணிந்துள்ளனர்.

இவர்கள், விவசாயப் பணியை திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருநின்றவூரின் கசுவா எனும் கிராமத்தில் செய்து வருகின்றனர்.

இங்குள்ள தோட்டத்தில் விளைந்துள்ள காய்கறிகளை பறிப்பது, மாடுகளுக்கு வைக்கோல் வைப்பது, அவற்றை பராமரிப்பது முதலிய வேலைகளை இவர்கள் செய்கிறார்கள்.

மேலும், சேவாலயம் என்னும் அமைப்பின் மூலமாக, இங்கு தங்கியுள்ள இந்த பெண்கள் இருவரும், மாணவர்களுக்கு பாடம் கற்று கொடுக்கின்றனர். வரும் ஆகஸ்ட் மாதம் சொந்த நாட்டிற்கு திரும்ப உள்ள இவர்கள், அங்கு செல்வதற்குள் தமிழ் மொழியை கற்றுக் கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மேலும், தமிழ் கலாச்சாரத்தால் கவரப்பட்ட தங்களுக்கு, உழவுப்பணி ஆத்ம திருப்தியை அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ஹன்னா ராஸ் கூறுகையில், ‘தமிழக மாணவர்கள் ஆர்வத்துடன் பாடங்களை கற்றுக் கொள்கிறார்கள். இங்கு இயற்கை முறை வேளாண்மை மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது.

இயற்கை வேளாண்மை மிகவும் அற்புதமானதாக இருக்கிறது. பூச்சி மருந்துகள் கிடையாது. தீமை விளைவிக்கும் பொருட்கள் சேர்க்கப்படுவதில்லை.

இது மிகவும் ஆரோக்கியமான விஷயமாக இருக்கிறது. இந்திய கலாச்சாரம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அதிலும் தமிழ் கலாச்சாரத்தை கற்றுக்கொள்ளவும், விரும்பவும், பின்பற்றவும் ஆரம்பித்துவிட்டேன்.

நான் சொந்த நாடு திரும்பினாலும் அங்கும், இங்கு கற்றுக் கொண்ட நல்ல பாடங்களை பின்பற்றுவேன்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்