நடிகை ஸ்ருதியின் வலையில் விழுந்த ஆண்கள்: சினிமாவை மிஞ்சும் நிஜக்கதை

Report Print Deepthi Deepthi in இந்தியா

கோயம்புத்தூரை சேர்ந்த ஸ்ருதி என்ற இளம்பெண் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து வெளிநாட்டு ஆண்களை ஏமாற்றிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் எப்படியெல்லாம் நாடகம் நடத்தி இப்படி பல இளைஞர்களை வலையில் விரித்தார்கள் என்பது குறித்து தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கடலூரை சேர்ந்த சித்ரா என்பவர் தனது கணவர் இறந்துவிட்டதால் தனது இளம்வயது மகள் ஸ்ருதி, மகன் சுபாஸ் ஆகியோருடன் வசித்து வந்தார். இடையில் பிரச்சன்னா வெங்கடேஷ் என்பவரை சித்ரா திருமணம் செய்துகொண்டு கோவையில் வசித்து வந்துள்ளார்

சித்ராவின் தொழில் கல்யாண புரோக்கர் என்பதால், அந்த தொழில் மூலம் எப்படியெல்லாம் பணம் சம்பாதிக்கலாம், எப்படி மற்றவர்களிடம் பழகலாம், எளிதில் எப்படியெல்லாம் ஆண்களை வலையில் வீழ்த்தலாம் என்பதெல்லாம் சித்ராவுக்கு கைவந்த கலை.

தனது மகள் பார்ப்பதற்கு அழகாக இருப்பதால், இது அவருக்கு வசதியாகிவிட்டது. மேலும், ஸ்ருதி 2 படங்களில் நடித்துள்ளார், அது இன்னும் வெளியாகவில்லை.

தனது மகளை விதம் விதமாக புகைப்படம் எடுத்து மேட்ரிமோனியில் பதிவேற்றம் செய்திருக்கிறார்.

இவர்கள் வீசும் வலை, வெளிநாட்டு ஐடி இளைஞர்களுக்கு. அப்படி சிக்கியவர்தான் ஜேர்மனியில் வசித்து வந்த பாருமுருகன் என்பவர். சுமார், 40 லட்சத்தை ஸ்ருதிக்கு கொடுத்து அவரால் ஏமாற்றப்பட்டு, சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளார்.

இவர் மட்டுமல்ல, நாமக்கல் சந்தோஷ்குமார் ரூ.43 லட்சம், நாகப்பட்டினம் சுந்தர் ரூ.15 லட்சம், திண்டுக்கல் ராஜ்கமல் ரூ.21 லட்சம், நாமக்கல் சசிகுமார் ரூ.22 லட்சம், சிதம்பரம் அருள்குமாரராஜா 20 பவுன் தங்க நகை, என ஒரு பட்டியலே செல்கிறது.

எப்படி வலைவிரிக்கிறார்கள்?

ஸ்ருதி தனது பெயரை மைதிலி என மேட்ரிமோனியில் மாற்றிவைத்துள்ளார். இவர்தான் முதலாவதாக அந்த ஆண்களிடம் பேசுவார். எனது அப்பா வெளிநாட்டில் வேலை பார்க்கிறார், எனது அம்மா ஹவுஸ் வைப், நானும் எனது தம்பியும் இருக்கிறோம். நான் இன்ஜினியரிங் கடைசி ஆண்டு படிக்கிறேன்.

படித்து முடித்தவுடன் எனது வீட்டில் திருமணம் செய்து வைக்கப்போகிறார்கள் என்று தன்னை பற்றி அறிமுகப்படுத்திக்கொள்வார்.

அதன்பின்னர், வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக்கில் தொடர்ந்து பேசி அந்த ஆண்களை தனது வலையில் வீழ்த்திவிடுவார். இவரது பேச்சால் கவரப்பட்ட ஆண்கள் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்துவிடுவார்கள்.

அதன்பிறகு, நிச்சயதார்த்தம் செய்துகொள்ளலாம் என்று முடிவெடுக்கும் ஸ்ருதியின் குடும்பம், கடைசிவரை நிச்சயதார்த்தம் செய்துகொள்ள மாட்டார்கள். நிச்சயதார்த்தம் செய்து கொள்வோம் என்ற அந்த இளைஞரை வெளிநாட்டில் இருந்து வரவழைக்கும் இவர்கள், வீட்டிற்கு அழைக்கமாட்டார்கள், பொது இடத்தில் சந்தித்துக்கொள்வார்கள்.

அந்த இளைஞனின் பணத்தில் நகை, ஆடைகள் என ஸ்ருதி ஷொப்பிங் செய்துகொள்வார். வாட்ஸ் அப்பில் கொஞ்சி பேசும் ஸ்ருதி, நேரில் சற்று அடக்கியேவாசிப்பார். நிச்சயதார்த்தம் செய்துகொள்ளும் நேரம் பார்த்து, எங்கள் உறவினர்கள் எதிர்க்கிறார்கள், தந்தையால் வரமுடியவில்லை என பல காரணங்களை கூறி நிச்சயதார்த்தத்தை தவிர்த்துவிடுவார்கள்.

கடைசியில், அந்த இளைஞன் தனது பணத்தையெல்லாம் செலவழித்துவிட்டு, வெளிநாட்டுக்கு திரும்பி செல்ல வேண்டும். அங்கு சென்றவுடன், தனது தாய்க்கு உடம்பு சரியில்லை என்று காரணம் சொல்லி பணம் பறிக்கும் வேலையில் ஸ்ருதி இறங்குவார்.

இதில், நீ எனக்கு பாதி கணவனாகிவிட்டாய் என்ற வார்த்தைகளால் அந்த இளைஞரை மூழ்கடிப்பார்.

ஸ்ருதி மீது இன்னும் பல இளைஞர்கள் புகார் கொடுத்துள்ளனர். ஒட்டுமொத்த புகார்களையும் திரட்டி வைத்துக் கொண்டு, ஸ்ருதி குடும்பத்தினரை கஸ்டடியில் எடுத்து விசாரித்தால்தான், உண்மைகள் வெளியே வரும் என பொலிஸ் கமிஷ்னர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்