ஆண்டாள் சர்ச்சை: வைரமுத்துவின் உருக்கமான விளக்கம்

Report Print Kabilan in இந்தியா

ஆண்டாள் சர்ச்சை தொடர்பாக கவிஞர் வைரமுத்து உருக்கமான விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

சமீபத்தில் கவிஞர் வைரமுத்து, ஸ்ரீவில்லிப்புத்தூரில் தமிழை ஆண்டாள் என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரையை அரங்கேற்றினார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், வைரமுத்து மீது இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு, அந்த வழக்குகளுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்தது.

இந்நிலையில், வைரமுத்து இந்த விடயம் குறித்து விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், ‘என் மனம் உடைக்கப்பட்டு கிடக்கிறது. கடந்த 10 நாட்களாக என் மூச்சு முட்டிக்கிடக்கிறது.

ஆண்டாளின் புகழ்பாட தாம் ஆசைப்பட்டது தவறா?. ஸ்ரீவில்லிப்புத்தூரில் எனது கட்டுரையை அரங்கேற்றியது தவறா?. தமிழுக்கு தடம் பதித்தவர்களை அறிமுகப்படுத்தவே ஆசைப்பட்டேன்.

நான் ஆண்டாளை சமூகவியல் பார்வையில் பார்த்தேன். தேவதாசி என்பது உயர்ந்தகுல பெண்களுக்கு வழங்கப்பட்ட பெயராகும். ஆராய்ச்சிக் கட்டுரையில் கூறப்பட்டுள்ள அந்த வார்த்தை, தற்போது தவறான அர்த்தத்தில் மாறியுள்ளது.

அதில் ‘தாசி’ என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். அதற்கு அர்த்தம் வேறு. ஆனால், இடையில் தாசியை வேசி என்பதுபோல வேறு அர்த்தத்தை ஏற்படுத்திவிட்டார்கள். நான் இது குறித்து விரிவாக கூறிய போதும் அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.

ஆண்டாள், ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்து அங்கு இறந்ததாக, அந்த ஆராய்ச்சி கட்டுரையில் குறிப்பிட்டிருப்பதாக கூறினேன். நான் ஆண்டாளை குறைத்து மதிப்பிட்டோ அல்லது சிறுமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலோ அந்த மேற்கோளை பயன்படுத்தவில்லை.

அது ஒரு ஆராய்ச்சி கட்டுரை, அதனை எல்லோராலும் புரிந்து கொள்ள முடியாது. இப்படி நான் சொல்வதால் மீண்டும் அவர்கள் என்னை தவறாக புரிந்து கொள்ளும் நிலை ஏற்படலாம்.

மேலும், அரசியல் கலந்த மதத்திற்காகவோ அல்லது மதம் கலந்த அரசியலுக்காகவோ தன்னுடைய கருத்து தவறாக திரிக்கப்பட்டு விட்டது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்