அன்று அனாதை சிறுமி.. இன்று அரசு அதிகாரி! சாதனை படைத்த தமிழச்சி

Report Print Harishan in இந்தியா

கேராளாவின் ரயில் நிலையத்தில் அனாதையாக கிடந்த பெண் இன்று ரயில்வே அதிகாரியாக பொறுப்பேற்றுள்ள நிகழ்வு அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

கேரளாவின் திருச்சூர் ரயில் நிலையத்தில் கடந்த 1998-ஆம் ஆண்டு மூன்று வயது குழந்தை ஒன்று அனாதையாக கிடந்துள்ளது. பசியால் மயங்கி கிடந்த அந்த சிறுமியை கிறிஸ்துவ சன்னியாஸ்திரிகள் சிலர் மீட்டுள்ளனர்.

சரியாக பேச கூட முடியாத நிலையில் அந்த சிறுமி தவித்த போது அங்கு வந்த ஆண் ஒருவர், அந்த குழந்தை என்னுடையது தான்.. நான் தமிழகத்தில் இருந்து இங்கு வேலைக்கு வந்துள்ளேன். வீடு இல்லாத காரணத்தால் ரயில் நிலையத்தில் குழந்தையை விட்டுச் சென்றேன் என விவரித்துள்ளார்.

நிலைமையை உணர்ந்த சன்னியாஸ்திரிகள் தங்குவதற்கு இடம் கிடைக்கும் வரை சிறுமியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என கூறி ஆசாதீப மடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

கீதா என்னும் அந்த சிறுமியின் கல்விக்கு என்னவெல்லாம் உதவி தேவை பட்டதோ அனைத்தையும் மடத்தின் நிர்வாகம் செய்துள்ளது.

படிப்பில் மட்டும் அல்லாமல் விளையாட்டிலும் சிறந்து விளங்கிய கீதா, கூடைபந்தாட்டத்தில் கேரளா மற்றும் இந்திய அணி சார்பாக விளையாடி பல பதக்கங்களை வென்றுள்ளார்.

அதன்பின் கோழிக்கோடு தனியார் கல்லூரியில் வரலாற்றில் பட்டம் பெற்ற கீதா, விளையாட்டு மற்றும் பட்டப்படிப்பு தகுதியுடன் ரயில்வே தேர்வு எழுதியுள்ளார்.

தேர்வில் வெற்றி பெற்ற கீதாவிற்கு கவுகாத்தி ரயில் நிலையத்தில் அதிகாரியாக பணி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் தான் படித்த மடத்திற்கு திரும்பிய கீதாவிற்கு அனைவரும் பாராட்டுகளை தெரிவித்த நிலையில் தான் பசியால் மயங்கி கிடந்த அந்த திருச்சூர் ரயில் நிலையத்திற்கு சென்று பார்த்துள்ளார்.

அப்போது கீதா கூறுகையில், எனது சொந்த ஊர் தமிழ்நாடு. தாத்தாவுடன் ஏற்பட்ட தகராறில் எனது தந்தை என்னை அழைத்துக் கொண்டு இங்கு வந்து விட்டார். இங்கிருந்து நான் அழைத்துச் செல்லப்பட்ட இரண்டாம் நாள் ஆசாதீப மடத்திற்கு வந்துச் சென்ற என் தந்தை இன்று வரை மீண்டும் வரவில்லை.

என் தாய்- தந்தை முகம் நன்றாக நினைவில் உள்ளது. தற்போது எங்கு உள்ளார்கள் என தெரியவில்லை. நிச்சயம் கண்டுபிடித்து விடுவேன் என உருக்கத்துடன் சொல்கிறார், இன்றைய ரயில்வே அதிகாரி கீதா.

மேலும், தமிழகத்தின் திருவண்ணாமலையை சேர்ந்த கூடைப்பந்து வீரர் ஜெயகுமார் என்பவருக்கும் கீதாவிற்கும் வரும் 22-ஆம் திகதி தமிழகத்தில் திருமணம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்