சடலமாக காதலி: கையில் பணமில்லாமல் தவிக்கும் வெளிநாட்டு இளைஞன்

Report Print Raju Raju in இந்தியா
312Shares
312Shares
ibctamil.com

இந்தியாவுக்கு வந்து தனது காதலியை இழந்ததோடு மீண்டும் சொந்த நாட்டுக்கு செல்ல பணமும் இல்லை என பின்லாந்து இளைஞர் புலம்பி வருகிறார்.

பின்லாந்தை சேர்ந்த அலக்ஸி ஜோயல், எமிலியா காதல் ஜோடி இந்தியாவுக்கு சுற்றுபயணம் வந்த நிலையில், கடந்த 9-ஆம் திகதி சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள விடுதியில் தங்கினார்கள்.

அடுத்தநாள் காலை எமிலியா விடுதி அறையில் சடலமாக கிடந்த நிலையில் போதையில் இருந்த ஜோயல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் எமிலியா மரணம் குறித்து பொலிசார் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

அவர்கள் கூறுகையில், விடுதியில் தங்கியிருந்த காதலர்கள் விடிய, விடிய மது அருந்தியதோடு, பெயின் கில்லர் போன்ற மாத்திரைகளை போதைக்காகப் பயன்படுத்தியுள்ளனர்.

போதை மாத்திரைகளின் வீரியத்தால் எமிலியா இறந்துவிட்டார், எமிலியாவின் மரணத்துக்கு அவர் அதிகளவில் சாப்பிட்ட போதை மாத்திரைகள் தான் காரணம் என்று மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.

பிரேத பரிசோதனை அறிக்கையில் இதன் முழு விவரம் தெரியவரும், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அலக்ஸி ஜோயலுக்கு, எமிலியா இறந்த தகவல் தெரிவிக்கப்பட்டதும் அவர் கதறி துடித்தார்.

இதையடுத்து எமிலியாவின் உடலை சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று அதிகாலை பின்லாந்துக்கு அனுப்பி வைத்துள்ளோம்.

இவர்களின் விசா, வரும் 21-ம் திகதியுடன் முடிவடைவதால் அதற்குள் ஜோயலையும் அவரது சொந்த நாட்டுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளோம்.

தற்போது, ஜோயல் ஆரோக்கியத்துடன் உள்ள நிலையில் மருத்துவமனையிலிருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்பிறகு அவரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம் என கூறியுள்ளனர்.

ஜோயலிடமிருந்து கைப்பற்றப்பட்ட மாத்திரைகள் சென்னையில் உள்ள மெடிக்கல் ஷாப்பில் வாங்கப்பட்டவைகள். ஜோயலிடம் விசாரித்த சமயத்தில் அவர், போதை மாத்திரைகளைச் சர்வ சாதாரணமாக வாயில் மென்று கொண்டிருந்தது தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், காதலியை இழந்த சோகத்தில் ஜோயல் இருக்கிறார். சென்னைக்கு வந்து என் காதலியை இழந்துவிட்டேன் மற்றும் பின்லாந்து செல்ல கையில் பணமில்லை என்று புலம்பி வருகிறார்.

இதையடுத்து தூதரகம் மூலம் பொலிசார் அவரின் பெற்றோரை தொடர்பு கொண்டுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்