நீதிமன்றத்தினால் இணைந்த காதல் ஜோடி: தருமபுரியில் அசம்பாவிதம் தவிர்ப்பு

Report Print Kabilan in இந்தியா

தருமபுரி மாவட்டத்தில் இரு வேறு சமூகத்தைச் சேர்ந்த ராஜ்குமார், பிரியங்காவின் காதல் பிரச்சனை, கலவரமாக மாற இருந்த சூழலில் தற்போது நீதிமன்றத்தின் மூலமாக தீர்வு கிடைத்துள்ளது.

தருமபுரி மாவட்டம் நல்லாம்பள்ளியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் மணியின் என்பவரின் மகன் ராஜ்குமார்.

இவர், நல்லாம்பள்ளி வன்னியர் தெருவைச் சேர்ந்த முனிராஜ் என்பவரின் மகள் பிரியங்காவை காதலித்து வந்துள்ளார்.

இவர்களின் காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து, இந்த விடயம் அதியமான் கோட்டை காவல்நிலையம் வரை சென்றது.

இந்நிலையில் கடந்த டிசம்பர் 30ஆம் திகதி சனிக்கிழமை அன்று, வெளியில் சென்ற பிரியங்கா வீடு திரும்பாததால், தன் மகளை கடத்திவிட்டதாக முனிராஜ் புகார் அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து சாதி ரீதியான பிரச்சனை ஏற்படலாம் என்று கருதிய நல்லாம்பள்ளி கோயில் தெருவைச் சேர்ந்த மக்கள், அதியமான்கோட்டை காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

கடந்த டிசம்பர் 31ஆம் திகதி இரவு 7 மணியளவில், நல்லாம்பள்ளி கிராமத்தில் நுழைந்த பிரியங்காவின் சகோதரர், இரண்டு வீடுகளின் மீது தாக்குதல் நடத்தினார்.

பதிலுக்கு தாக்குதல் நடத்த, அக்கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பெட்ரோல் குண்டுகளை தயார் செய்தபோது, பொலிசார் அவர்களை கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, இரண்டு கிராமத்திலும் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதால், இச்சம்பவம் தர்மபுரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்று காலை தர்மபுரி மாவட்டம் ஜெ.எம்-1 நீதிமன்றத்தில், காதலர்கள் ராஜ்குமார் மற்றும் பிரியங்கா ஆகிய இருவரும் தோன்றினர்.

விருப்பத்துடன் தான் ராஜ்குமாருடன் சென்றதாக பிரியங்கா ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததைத் தொடர்ந்து, பிரியங்காவை காதலர் ராஜ்குமாருடன் செல்ல நீதிபதி அனுமதி வழங்கினார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்