20 ரூபாய் நோட்டு அமெரிக்க டொலரான கதை: அடுத்தது என்ன?

Report Print Harishan in இந்தியா

ஆர்.கே நகர் தொகுதியில், 20 ரூபாய் நோட்டுக்கு அமெரிக்க டாலருக்கு இணையான மதிப்பு ஏற்பட்டிருப்பது பற்றித்தான் எஞ்சியுள்ள 233 தொகுதிகளிலும் பேச்சாக இருக்கிறது.

நோட்டைக் கையில் வைத்திருக்கும் தொகுதி மக்களோ, 'இந்த 20 ரூபா நோட்டை எப்படித்தான் பத்திரமா வெச்சிருக்கப் போறோமோ, யாரு என்ன பண்ணுவாங்களோ தெரியலையே...' என்ற கவலையுடன் இருக்கின்றனர்.

ஆர்.கே நகர் தொகுதியில், இப்படிப்பட்ட தேர்தல் நடத்தை விதி மீறலைக் கண்டித்து முதன்முதலில் சாலைமறியல் செய்தது, பி.ஜே.பி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்தான். 'வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கிறார்கள்' என்று தொகுதியின் பிரதான சாலையில் மறியல் செய்த தமிழிசை, அதே வேகத்தில், தேர்தல் அலுவலர் வேலுச்சாமியிடம் புகார் மனு கொடுக்க அவர் அலுவலகத்துக்கும் போய்விட்டார்.

அந்த அலுவலக வாசலில் வேலுச்சாமிக்காக, பத்து நிமிடம் காத்திருந்தார் தமிழிசை. அந்தப் பத்து நிமிட இடைவெளியில், வேலுச்சாமி மாற்றப்பட்டு, தேர்தல் அலுவலராக பிரவீன் பி.நாயர், நியமிக்கப்பட்டுவிட்டார்.

நடிகர் விஷாலின் வேட்புமனு முதலில் ஏற்பு, பின்னர் நிராகரிப்பு தொடர்பான விவகாரத்தில்தான் வேலுச்சாமி மாற்றப்பட்டார் என்றும் ஒருதரப்பில் சொல்லப்பட்டதால், தமிழிசை மறியல் குறித்து கவலைப்பட எந்த அதிகாரியும் தயாராக இல்லை என்பது அடுத்தடுத்த நாள்களில் நடந்த 'பணப்பட்டுவாடா' புகார்களின் மூலம் தெரிந்தது.

அதேபோல் வாக்குப் பதிவு நாளன்றே பி.ஜே.பி வேட்பாளரான கரு.நாகராஜன், "வாக்காளர்களுக்கு 20 ரூபாயை டோக்கனாகக் கொடுத்து இருக்கிறார்கள். இதுபற்றி நான் தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்துள்ளேன்" என்று மீடியாக்களிடம் சொன்னார். அன்று மட்டுமே, 20 ரூபாய் நோட்டை 10 ஆயிரம் ரூபாய்க்கான டோக்கன் அட்வான்ஸாக கொடுத்தனர் என்று 15 பேரை போலீஸார் கைது செய்தனர்.

அப்படிக் கைது செய்யப்பட்டவர்கள் குறித்த எந்தத் தகவலையும் போலீஸார் முழுமையாக வெளியில் தெரிவிக்கவில்லை. அதில் சிலர் மீது, 'இட்லிக்கடையில் மாமூல் கேட்டு மிரட்டியபோது போலீஸ் மறைந்திருந்து பிடித்தது' என்ற ரீதியில் புகார்களைப் பதிவு செய்து வைத்திருந்தனர்.

ஆர்.கே.நகர்த் தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் 12 -ஆம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டு, பணப்பட்டுவாடா புகாரால் முதலில் ரத்து செய்யப்பட்டது. எந்தக் காரணத்துக்காக அன்று இடைத்தேர்தல் நிறுத்தப்பட்டதோ, அந்தக் காரணத்துக்கு தீர்வைக் காணாமலே, டிசம்பர் 21-ஆம் தேதியன்று இடைத்தேர்தலை நடத்திமுடித்துவிட்டார்கள்.

ஒரு தெருவுக்கு நான்கு பொறுப்பாளர்கள் என்ற கணக்கில் ஆட்கள் நியமிக்கப்பட்டு தொகுதியின் 103 தெருக்களுக்கும், 412 ஆட்கள் போடப்பட்டு, அவர்கள் மூலமாக வீட்டுக்கு வீடு 20 ரூபாய் டோக்கன் போய்ச் சேர்ந்திருக்கிறது.

இதுகுறித்து என்னிடம் பெருமையுடன் விளக்கிய தென்மாவட்ட ஆசாமி ஒருவர், "தெருவுக்கு ரெண்டு கார்னர் பாய்ன்ட். தெருவின் இரண்டு முனையிலும் ஓர் ஆள் இருப்போம். மீதி இரண்டு பேர் தெருவில் நடப்பது, ஓரிடத்தில் நிற்பது, உட்கார்வது என்று இருப்பார்கள். சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரி அந்த இரண்டுபேரும் ஏதாவது ஒரு வீட்டுக்குள் நுழைந்து அவர்களிடம் 'விஷயம் இதுதான்' என்று பேசி 20 ரூபாய் டோக்கனைக் கொடுத்துவிடுவார்கள்.

அதற்கு முன்னதாக ஒரு குறிப்பிட்ட தொகையை நேரடியாகவே கொடுத்துவிட்டோம்; அதுவேறு விஷயம். ஒருநபர், ஒருநாளில் ஐந்து வீடுகளில் பேசி முடித்துவிட வேண்டும் என்பது பிளான். அப்படிப் பார்த்தால், மூன்று நாளில் ஒருவர் 15 வீடுகளை சரிக்கட்டி ஆக வேண்டும். தெருவுக்கு மொத்தம் நான்குபேர் 60 வீடுகள். நிலைமைக்கு ஏற்றார்போல் 60 வீடுகள் என்பது 80 வீடாகக் கூடினாலும் கவலையில்லை. குறையக் கூடாது. முதல் இரண்டுநாள்கள் மட்டுமே நாங்கள் தயங்கித் தயங்கி வீடுகளை அணுகினோம்.

மூன்றாவது நாளிலிருந்து பிரசாரத்தின் கடைசிநாள் வரையில், நாங்கள் யார் வீட்டுக்கும் போகவில்லை. ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டுக்குத் தகவல் கிடைத்து அவர்களாகவே எங்களைத் தேடிவந்து குடும்பத்தின் வாக்காளர் பட்டியலைக் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். மற்ற இடங்களில் எப்படி இருக்கிறது என்று போன் செய்து விசாரித்தபோது, இந்தத் தெருவின் நிலைமைதான் அனைத்துத் தெருக்களிலும் இருக்கிறது என்பதை அறிந்துகொண்டோம். பிரசாரத்தின்போது வேட்பாளருடன் வருகிறவர்களுக்கு அன்றாட 'பேமண்ட்' கொடுப்பது, வீடுகளில் 'பூத் ஸ்லிப்' கொடுப்பது, 'செக்' பண்ணுவது மாதிரியான எந்த வேலையும் எங்களுக்கு இல்லை. இதே 'மெத்தேட்' மூலம்தான் தொகுதியில் நூறு சதவீத வீடுகளையும் கவர்செய்தோம்.

இப்போது டோக்கன் வைத்துள்ள எல்லோருக்கும் கண்டிப்பாகப் பணம் போய்ச் சேர்ந்து விடும். அதில் எந்தக் குழப்பமும் இல்லை. டோக்கனுக்குப் பணம் என்கிற மேட்டர் சக்ஸஸ் ஆனதைப் பார்த்துத்தான் எதிர் சைடு ஆட்கள், 'டோக்கனுக்குப் பணமெல்லாம் வராது, உங்களை ஏமாத்திட்டாங்க' என்று கிளப்பி விட்டிருக்கிறார்கள். டோக்கன் கொடுத்த ஆள் யாரென்று தெரியாமல், எதிர்த்தரப்பு ஆட்களிடமே போய், டோக்கனைக் காட்டி சிலர் பணம் கேட்டிருக்கிறார்கள். அப்படி ஒன்றும் தெரியாத அப்பாவிகள்தாம் போலீஸில் மாட்டியிருக்கிறார்கள்.

லோக்கல் கட்சிக்காரர்கள் அனைவருக்கும் புது சிம் கார்டு வாங்கிக் கொடுத்தோம். அந்த சிம்கார்டு நம்பரைத்தான் அவர்கள், 20 ரூபாய் டோக்கன் வாங்கியவர்களிடம் கொடுத்துள்ளனர். 'பணம் வரவில்லை என்றால் நாங்கள் பொறுப்பு. இந்த நம்பருக்குப் போன் செய்யுங்கள்' என்று சொல்லி, அந்த நம்பர்களைத்தான் கொடுத்திருக்கிறார்கள். நாங்களும் யாரையும் ஏமாற்றும் எண்ணத்தில் இல்லை. எங்களைப் பணம் கொடுக்க விடாதபடி எதிர்த்தரப்பினர் வேலை செய்கிறார்கள். ஆனாலும் மக்களிடம் கொண்டுபோய் பணத்தைச் சேர்த்து விடுவோம்" என்கிறார் சாதாரணமாக.

தொகுதியில் மொத்தமுள்ள 2 லட்சத்து 28 ஆயிரத்து 234 வாக்காளர்களில், 50.32 சதவீத வாக்காளர்கள், 89,013 வாக்குகளை குக்கர் சின்னத்துக்குப் போட்டு சுயேச்சையான டி.டி.வி. தினகரனை வெற்றிபெற வைத்திருக்கிறார்கள். கடந்த இடைத்தேர்தலில் தொப்பி சின்னத்தைத் தேர்ந்தெடுத்த தினகரன், இந்தமுறை அதே சின்னத்துக்கு ஆசைப்பட, அது கைநழுவிப் போனது. ஆர்,கே.நகர்த்தொகுதி தேர்தல் அலுவலகத்தில் கடந்த 7-ஆம் தேதி, நடந்த குலுக்கலில் தினகரன் 'குக்கர்' சின்னத்தைத் தேர்ந்தெடுத்தார்.

சின்னம் கைக்கு வந்த 14-ஆம் நாள் தேர்தல் நாள். வெறும் பதினான்கே நாள்களில் குக்கர் சின்னம், தொகுதியின் 103 தெரு வாக்காளர்களையும் போய்ச் சேர்ந்துவிட்டது. ஒரு வாக்குச்சாவடிக்கு 250 முதல் 280 வாக்குகள் மட்டும் பெற்றாலே 70 ஆயிரம் வாக்குகளைப் பெற்றுவிட முடியும் என்பது டி.டி.வி. தினகரன் தரப்புப் போட்டக் கணக்கு, அதையும் தாண்டி 89,013 வாக்குகளை தினகரன் வாங்கிக் குவித்ததுதான் 'வெளியில்' இருந்து பார்க்கும் அரசியல் நோக்கர்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

அதே வேளையில் தொகுதி கரைவேட்டிகளுக்கு இதில் எந்த வியப்பும் ஏற்படவில்லை. எங்கெங்கே யார் யார் விலை போயிருக்கின்றனர், எந்த வாக்குக்கு என்ன விலை என்பது அவர்களுக்கு வாக்குப்பதிவு நாளன்றே தெரிந்திருந்தது. ஆளுங்கட்சியான அ.தி.மு.க-வைத் தவிர்த்து, 'முடிவு' நாளன்று அனைத்துத் தரப்பும் காத்த மயான அமைதியே அதற்குச் சான்றாக இருந்ததையும் அன்று காணமுடிந்தது.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், "ஓட்டுக்கு ரூ.6 ஆயிரம் என விலை நிர்ணயித்து வழங்கிய ஆட்சியாளர்களையும், 20 ரூபாய் டோக்கன் கொடுத்து வாக்களித்தபின் 10 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்த ஹவாலா அரசியல்வாதிகளையும் தேர்தல் ஆணையம் சிறிதும் கண்டுகொள்ளவே இல்லை. வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து வாக்குகளுக்கு விலை பேசக் கூடாது என்ற ஜனநாயகத்தின் அடிப்படைக் கொள்கையைக் கடைப்பிடித்த தி.மு.க. தோல்வியடைந்திருப்பது லட்சிய ரீதியான தன்மானம்" என்று கூறியிருக்கிறார்.

பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இதற்குப் பதிலளித்த டி.டி.வி தினகரன், "டோக்கன் கொடுத்து, தொகுதி மக்களிடம் கடன் சொல்லி ஓட்டு வாங்க வேண்டிய நிலை எங்களுக்கு இல்லை. என்னை நம்பியிருக்கும் மக்களிடம் நான் ஏன் கடன் சொல்ல வேண்டும்? ஆனால், இப்படி யாராவது ஓட்டுக் கேட்பார்களா? இதை எல்லாம் ஒரு குற்றச்சாட்டாக வைப்பதைப் பார்த்தால், வேடிக்கையாக இருக்கிறது" என்றார்.

கொருக்குப்பேட்டை, மீனாம்பாள் நகர், எழில்நகர் போன்ற இடங்களில், 20 ரூபாய் டோக்கன் லிஸ்ட்டில் பெயர் விடுபட்டவர்களுக்கு டோக்கன் வழங்குகிறார்கள் என்ற தகவலால் புதுவண்ணாரப் பேட்டையைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் அங்கு வந்து, டோக்கன் கேட்டார். அங்கே டோக்கன் கொடுத்துக் கொண்டிருந்தவர்கள் "உங்கள் பகுதிக்கு வேறு டீம் வரும்.

இந்தப் பகுதி ஆட்களுக்கு கொடுக்க மட்டுமே நாங்கள் வந்திருக்கிறோம்" என்று சொல்ல தகராறு முற்றியதில் கார்த்திகேயன் மோசமாகத் தாக்கப்பட்டார். இப்போது கார்த்திகேயன், சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார். கார்த்திகேயனைத் தாக்கியதாக ஜான்பீட்டர், சரண்ராஜ், செல்வம், ரவி ஆகியோரை ஆர்.கே.நகர் போலீசார் கைது செய்துள்ளனர்.

அதேபோல் வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, புது வண்ணாரப் பேட்டை, காசிமேடு, திடீர்நகர், வ.உ.சி.நகர், நேதாஜிநகர், மீனாம்பாள் நகர் என தொகுதியின் முக்கியப் பகுதிகளில், 'டோக்கன் இங்கே... துட்டு எங்கே...' என்ற கோஷம் எழத் தொடங்கியுள்ளது. ஒரு கட்டத்தில் நாங்கள் உங்கள் மீது புகார் கொடுப்போம் என்று 'டோக்கன்' ஆசாமிகளிடம் பொதுமக்கள் எகிற, 'போலீசில் போய்ப் புகார் கொடுத்தால், ஓட்டுப்போட பணம் கேட்டதற்காக உங்களையும்தான் போலீஸ் கைது செய்யும்' என்று வந்த பதிலால், டோக்கனைக் கையில் வைத்திருக்கும் பொதுமக்கள் அமைதி காக்கிறார்கள். இந்தமாதிரியான சூழலால் இடைத்தேர்தலை மிஞ்சிய பரபரப்பு தொகுதியில் ஏற்பட்டுள்ளது.

இது இப்படியிருக்க, டோக்கன் ஆசாமிகளை கையும் களவுமாகப் பிடிக்க ஒரு டீமும், அந்த டீமிடம் சிக்காமல் வாக்காளர்களிடம் பணத்தை சேர்த்துவிட ஒரு டீமும் தொகுதிக்குள் தீவிரமாகச் சுற்றிக் கொண்டிருக்கின்றன. இப்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இல்லை, அதனால் தொகுதியில் தேர்தல் ஆணையம் இல்லை.

கரைவேட்டிகள் தொகுதி முழுவதும் தெருத்தெருவாகச் சுற்றிக் கொண்டிருப்பதை ஒரு குற்றமாகக் கருதி போலீஸார் விசாரிக்கவும் முடியாது என்பதால், இருதரப்பும் மோதிக்கொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் மட்டுமே போலீஸார் என்ட்ரி ஆகமுடியும் என்பதே நிலைமை.

தி.மு.க. தோல்விக்குக் காரணமறிய அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின், ஆய்வுக்குழு நியமித்து அந்தக் குழுவும் பணியைத் தொடங்கி விட்டதாகச் சொல்கிறார்கள். நாமும் அதுகுறித்து பல்வேறு தரப்பில் ஆய்வு மேற்கொண்டோம். அதில் ஒன்று, காசிமேடு ஒன்று முதல் மூன்று பிரதான வீதிகள் கொண்ட பாகம் 160-ல் எப்போதுமே அ.தி.மு.க-வின் வாக்குகள் மிகவும் பின் தங்கி தி.மு.க-வின் வாக்கு உயரத்தில் இருக்கும். ஆனால், கடந்த காலங்களில் அ.தி.மு.க. பின் தங்கியதை விடவும் மோசமான எண்ணிக்கையில் இந்த இடைத்தேர்தலில் பின் தங்கியிருக்கிறது தி.மு.க!

இந்தப் பகுதியில் வசிக்கும் பூங்கொடி என்பவர் வீட்டிற்குப் போய் வாக்கு சேகரித்தபோது ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்திருக்கிறது. பூங்கொடியின் வீடு, காசிமேடு இரண்டாவது தெருவில் இருக்கிறது. "இங்கே பாருங்கப்பா, ஏதோ வந்துட்டீங்க... எங்க வீட்டில் மொத்தம் 12 ஓட்டு இருக்கிறது. எல்லாமே உதயசூரியனுக்குத்தான் போடுவோம். நீங்க எந்த டோர் நம்பரை வேண்டுமென்றாலும் எழுதிக் கொள்ளுங்கள். எங்க வீட்டுப்பக்கம் மட்டும் வந்துடாதீங்க... பணம் அது இதுன்னு ஆசை வார்த்தை காட்டும் வேலையையும் இங்கே காட்ட வேண்டாம். வந்த வழியைப் பார்த்துக்கிட்டு போய்க்கிட்டே இருங்க..." என்று சீறியிருக்கிறார்.

'அம்மா, குடிக்கக் கொஞ்சம் தண்ணியாவது கொடுங்களேன்' என்றவர்களுக்குப் பூங்கொடி சொன்ன பதில், "எங்க எதிரிக் கட்சிக்காரங்களுக்கு இந்த நேரத்தில் தண்ணிகூட கொடுக்கமாட்டேன். எலெக்‌ஷன் முடியட்டும், அப்புறம் சராசரி ஆளுங்களா வாங்க, விருந்து சோறே போடறேன்" என்றாராம்.

- Vikatan

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்