தற்கொலை செய்த அனிதாவின் சகோதரருக்கு அரசு பதவி

Report Print Samaran Samaran in இந்தியா

நீட் தேர்வு பிரச்சினையில் தன் உயிரை மாய்த்துக்கொண்ட அனிதாவின் சகோதரருக்கு சுகாதாரத்துறையில் இளநிலை உதவியாளர் பணிக்கான அரசாணையை அனிதாவின் குடும்பத்தினர் முதல்வரிடம் பெற்றுக்கொண்டனர்.

நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் மாநில பாடத்திட்டத்தில் படித்து 1200க்கு 1176 மதிப்பெண் பெற்றார்.

மருத்துவப்படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயம் என்று அறிவிக்கப்பட்ட பிறகு, நீட் தேர்வில் 700க்கு 86 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றதால் மருத்துவம் படிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார். இதனால் ஏமாற்றம் அடைந்த அவர் தற்கொலை செய்துகொண்டார்.

இவரது தற்கொலை தமிழகத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது, மாணவர்களும், பொதுமக்களும் அனிதாவின் மரணத்திற்காக நீதி கேட்டு பல போராட்டங்கள் நடத்தினர்.

இந்நிலையில் தமிழக அரசு அவரது குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் நஷ்டஈடு வழங்குவதாக கூறியது. ஆனால் அனிதாவின் குடும்பத்தினர் தமிழக அரசின் நஷ்ட ஈட்டுத்தொகையை வாங்க மறுத்தனர்.

இந்நிலையில் இன்று அனிதாவின் சகோதரர் சதிஷ்குமாருக்கு தமிழக சுகாதார துறையில் இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டது.

தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவரிடம் பணி ஆணையை முதல்வர் பழனிசாமி வழங்கினார். மேலும் ரூ.7 லட்சத்திற்கான காசோலையையும் அனிதாவின் தந்தையிடம் முதல்வர் வழங்கினார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்