பெரியபாண்டியன் கொலைக்கு நீதி வேண்டும்: மனைவி பானுரேகா கோரிக்கை

Report Print Harishan in இந்தியா
104Shares

ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட காவல் ஆய்வாளர் பெரியபாண்டியனின் மரணத்திற்கு நீதி விசாரணை நடத்த வேண்டும் என அவரது மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன், நகை கொள்ளையர்களை பிடிப்பதற்காக ராஜஸ்தான் சென்றிருந்த போது துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

கடந்த வாரம் நடந்த இந்த துயர சம்பவம் இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது, அவரது உடல் சென்னை கொண்டுவரப்பட்டு முதலமைச்சர் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்திய பின் சொந்த ஊரான நெல்லை மாவட்டம் மூவிருந்தாளி கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கின் முக்கிய திருப்பமாக பெரியபாண்டியன் சுடப்பட்ட துப்பாக்கியில் உடன் சென்ற காவல் ஆய்வாளர் முனிசேகரின் கைரேகை பதிவாகியுள்ளதாக ராஜஸ்தான் பொலிசார் தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து பெரியபாண்டியனின் மனைவி பானுரேகா கூறுகையில், கொள்ளையர்களை பிடிக்க சென்ற தனிப்படையில் எனது கணவர் பெரியபாண்டியன், கொளத்தூர் ஆய்வாளர் முனிசேகர் மற்றும் 3 காவல் இடம் பெற்றிருந்தனர்.

எனது கணவர் கொலை குறித்து முதலில் வெளியான தகவலும் தற்போது ராஜஸ்தான் பொலிசார் வெளியிட்டுள்ள தகவலும் முரண்பாடாக உள்ளது.

மேலும் எனது கணவர் 13-ந்தேதி அதிகாலை 2.30 மணிக்கு இறந்துள்ளார், காலை 7 மணிக்கு பிறகு தொலைக்காட்சியில் பார்த்துதான் இதனை தெரிந்து கொண்டோம், பொலிசார் எந்த தகவலையும் என்னிடம் தெரிவிக்கவில்லை.

இந்த குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் என் கணவரின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தப்பட்டு உண்மை நிலையை எங்கள் குடும்பத்துக்கு தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்