கொள்ளையர்களை துரத்திச் சென்ற தமிழக காவலர் ராஜஸ்தானில் சுட்டுக்கொலை: மனைவி கதறல்

Report Print Arbin Arbin in இந்தியா

நகைக்கடை கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான் சென்ற இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் அவரது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கொளத்தூர் புதிய லட்சுமி புரத்தில் முகேஷ் குமார் என்பாரின் நகைக்கடையில் கடந்த நவம்பர் 16ஆம் திகதி கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.

மாடிக் கடையை வாடகைக்கு எடுத்த கொள்ளையர் மேல்புறத்தை ஓட்டை போட்டு 3.5 கிலோ தங்கத்தை கொள்ளையடித்தனர்.

இந்த நகைக் கடை கொள்ளை தொடர்பாக ஏற்கனவே சென்ராம் , கேலாராம், சங்கர்லால், தவ்ராம் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்ராமின் மகன் நாதுராம், தினேஷ் சவுத்ரியை பிடிக்க ராஜஸ்தானுக்கு 6 பேர் கொண்ட தனிப்படை பொலிசார் சென்றிருந்தனர்.

இந்த நிலையில் இன்று காலையில் பாலி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் பதுங்கியிருந்த கொள்ளையர்களுடன் நடந்த சண்டையில் மதுரவாயல் சட்ட ஒழுங்கு காவல் ஆய்வாளர் பெரியப்பாண்டி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

மேலும் கொளத்தூர் சட்ட ஒழுங்கு ஆய்வாளர் முனிசேகர் என்பவரும் படுகாயம் அடைந்தார். இவர்களுடன் மேலும் 3 காவலர்கள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய பெரியபாண்டியின் மனைவி, தினசரியும் செல்போனில் பேசுவார். பயப்படாம இரு என்று சொன்னார். தினசரியும் என்னை எழுப்பி விடுவார்.

குடும்பத்தை விட வேலைதான் அவருக்கு ரொம்ப முக்கியம். குடும்பம் இரண்டாம்பட்சம்தான். தினசரியும் எழுப்பி விடுவார். இன்று அவரிடம் இருந்து போன் வரவில்லை என்பதால் நான் உறங்கிவிட்டேன். என் உறவினர்தான் டிவியில் செய்தியை பார்த்து விட்டு போன் செய்தார். கூட அதிக பொலிசார் போயிருந்தால் இப்படி நடந்திருக்காது என்று கூறி அவர் கதறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்