சுனாமியில் பெற்றோரை இழந்த சிறுமிகளை பொலிஸ் ஆக மாற்றிய ஆசிரியர்

Report Print Kabilan in இந்தியா

கடலூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற உடற்கல்வி ஆசிரியர் மாரியப்பன். இவர் சுனாமியில் பெற்றோரை இழந்த ஐந்து சிறுமிகளை தத்தெடுத்து வளர்த்து காவல் கண்காணிப்பாளர்களாக ஆக்கியுள்ளார்.

கடந்த 2004ஆம் ஆண்டு கடலூரை சுனாமி தாக்கியதில், கடற்கரை மீனவக் குப்பங்கள் சிதைந்துபோயின. வீடு, வாசல், உறவினர்களை பலர் இழந்தனர். பெற்றோரையும் பல பிள்ளைகள் இழந்து தவித்தனர்.

அப்போது, ஓய்வுபெற்ற உடற்கல்வி ஆசிரியரான மாரியப்பன், பெற்றோரை இழந்த பிள்ளைகளின் நிலையைக் கண்டு மனம் வருந்தினார். தன்னால் அவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என நினைத்த அவர், ஐந்து சிறுமிகளை தத்தெடுத்து வளர்க்க ஆரம்பித்தார்.

மாரியப்பன், சிறந்த கால்பந்து வீரர் ஆவார். எனவே, அந்த சிறுமிகளுக்காக இந்திரா காந்தி விளையாட்டு அகாடமியை ஆரம்பித்தார். அதற்கு தேவையான நிதியை தனது ஓய்வூதிய பணத்தில் இருந்து பெற்றார். மேலும் சிலரும் அவருக்கு உதவினர்.

சிறுமிகளை கால்பந்து விளையாட்டுக்கு பழக்கினார். தனக்கு தெரிந்த அத்தனை யுக்திகளையும் அவர்களுக்கு கற்றுக் கொடுத்தார். பெற்றோரை இழந்த அந்த சிறுமிகளும், தங்களின் சிந்தனையை சிதற விடாமல் விளையாட்டின் மீது கவனம் செலுத்தினர்.

அதனால் சிறந்த கால்பந்து வீராங்கனைகளாக மாறினர். மேலும், தமிழகம் மட்டுமின்றி, அனைத்து இடங்களிலும் வெற்றி வாகை சூடியதால் ‘லேடி மான்செஸ்டர் யுனைடெட்’ என்று அழைக்கப்பட்டனர்.

சிறுமிகள் பள்ளிப்படிப்பை முடித்தப்பிறகு, அவர்களை பொலிஸ் வேலையில் சேர்த்து விட நினைத்த மாரியப்பன், அதற்காக பட்டப் படிப்பு தேவை என்பதால் இலவச கல்வி கிடைப்பதற்காக தேடியலைந்தார்.

அவரின் முயற்சிக்கு பலனாக, கடலூரில் உள்ள புனித ஜோசப் கல்லூரி, மாணவிகளுக்கு படிப்பு, உணவு,விடுதி ஆகியவற்றை இலவசமாக வழங்கியது.

பட்டப்படிப்பை முடித்த மாணவிகள், நல்ல உடல் தகுதியுடன் இருந்ததால் பொலிஸ் வேலையில் சேர்வது அவர்களுக்கு அவ்வளவு சிரமமாக இல்லை.

தற்போது, வினிதா, இந்துமதி, சரண்யா, தேன்மொழி, பத்மாவதி என்னும் ஐந்து மாணவிகளும் எஸ்.ஐ-க்கு தேர்வானதுடன், பயிற்சி முடித்து பணியிலும் சேர்ந்துவிட்டனர்.

மாரியப்பனின் கனவும் நிறைவேறிவிட்டது. பொலிஸ் துறையிலும், அந்த ஐவரும் மகளிர் கால்பந்து அணியில் சேர்ந்து கலக்கி வருகின்றனர்.

இது குறித்து மாரியப்பன் கூறுகையில், ‘இந்த பிள்ளைகள் ஐந்து வயதில் என்னிடம் வந்தார்கள். தொடக்கத்தில் நிதி திரட்ட கஷ்டப்பட்டேன். நண்பர்கள் கொடுத்த நிதி தான் உதவியாக இருந்தது.

இப்போது, நான் நினைத்தது போலவே ஐந்து பேரும் காவல் கண்காணிப்பாளர் ஆகிவிட்டனர். இவர்கள், இன்னும் ஏராளமான காவல் கண்காணிப்பாளர்களை, மாவட்ட ஆட்சியர்களை உருவாக்குவார்கள்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்