அன்றே விடுதலையாகி இருப்பார்! பேரறிவாளன் தொடர்பில் முன்னாள் சிபிஐ அதிகாரி பரபரப்பு தகவல்

Report Print Deepthi Deepthi in இந்தியா
229Shares
229Shares
ibctamil.com

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு 23 ஆண்டுகாலம் தனிமைச் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் அன்று அளித்த வாக்குமூலத்தில், சில பகுதிகளை சிபிஐ நீக்கியதாக அவரை விசாரித்த சிபிஐ அதிகாரி உச்ச நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

அந்த நீக்கப்பட்ட பகுதிகளில் இரண்டு 9 ஓல்ட் பேட்டரிகள் எந்த நோக்கத்துக்காக வாங்கப்பட்டது என்பது பற்றி தனக்கு ஒன்றும் தெரியாது என்று பேரறிவாளன் கூறியிருந்ததாக அவர் இன்று தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 27, 2017 என்று தேதியிடப்பட்ட வாக்குமூலத்தில் வி.தியாகராஜன் என்ற அந்த முன்னாள் சிபிஐ அதிகாரி, “2 பேட்டரிகள் எந்த நோக்கத்துக்காக வாங்கப்பட்டது என்பது குறித்து தனக்கு எந்த ஒரு தகவலும் தெரியாது என்று பேரறிவாளன் கூறியதை நான் பதிவு செய்யவில்லை.

இந்த வாக்குமூலம் அவரை குற்றச்சாட்டிலிருந்து விடுவித்திருக்கக் கூடும் என்பதாலும் வாக்குமூலம் பதிவு செய்யும் நோக்கத்தையே இழந்து விடும் என்பதாலும் இது பதிவு செய்யத் தகுதி பெறாதது என்று முடிவெடுத்து நான் பதிவு செய்யவில்லை.

மேலும் அந்தச் சமயத்தில் வெடிகுண்டு பற்றிய விசாரணையும் நிலுவையில் இருந்தது என்று கூறியுள்ளார்.

பேரறிவாளனின் பங்கு பற்றி சிபிஐ உறுதியாக இல்லை. சதி பற்றி இவருக்கு ஒன்றும் தெரியாது என்பது கொலை வழக்கு விசாரணை தொடர்ந்தபோது உறுதி செய்யப்பட்டது என்ற தியாகராஜன் இது பற்றி சிவராசன், எல்டிடிஇ தலைவர் பொட்டு அம்மானுக்கு அனுப்பிய ஒயர்லெஸ் செய்தியை குறிப்பிட்டார், அந்த ஒயர்லெஸ் செய்தியில், தான், தனு, சுபா ஆகிய மூவர் தவிர கொலை சதி வேறு ஒருவருக்கும் தெரியாது என்று குறிப்பிட்டுள்ளதை தெரிவித்துள்ளார் தியாகராஜன்.

இதனையடுத்து பேரறிவாளன் எதற்காக 2 பேட்டரிகள் வாங்கப்பட்டது என்று தனக்கு தெரியாது என்று கூறியது உண்மையானதுதான் என்று உறுதியானதாக அவர் தெரிவித்தார்.

2 பேட்டரிகளை வாங்கிக் கொடுத்ததன் செயலே கொலை சதியில் ஈடுபாடு கொண்டதாக ஆகாது. ஒயர்லெஸ் மெசேஜ் இதனை உறுதி செய்கிறது என்று தியாகராஜன் உச்ச நீதிமன்ற வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

எனவே மரண தண்டனையிலிருந்து பேரறிவாளனுக்கு கருணை காட்டிய உச்ச நீதிமன்றம் நீண்டகாலமாக நிலுவயில் உள்ள அவரது விடுவிப்பையும் கருணையுடன் அணுக வேண்டும் என்று தியாகராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.

நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென்று தானாகவே முன்வந்து தன்னால் நீக்கப்பட்ட பேரறிவாளன் வாக்குமூலத்தை வெளிப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அமர்வின் முன் பேரறிவாளன் வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் கூறும்போது, “வெடிகுண்டைத் தயாரித்த குற்றவாளி இலங்கை சிறையில் இருக்கிறார், இன்று வரை விசாரணை அதிகாரிகள் அவரை விசாரணையே செய்யவில்லை.

ஆனால் 2 பேட்டரிகளை வாங்கிக் கொடுத்ததற்காக அறியாச் சிறு வயதிலிருந்து ஒரு நபர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனிமைச்சிறையில் வாடி வருகிறார். வெடிகுண்டில் இந்த பேட்டரிகள்தான் பயன்படுத்தப்பட்டது என்பது கூட யூகம்தான்” என்றார்.

இதனையடுத்து, பேரறிவாளன் தண்டனைக் குறைப்பு குறித்த தமிழக அரசின் முடிவை மத்திய அரசு ஏற்கிறதா என்பதை 2 வாரங்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது.

- Thehindu

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்