ரூ.1000 கோடியில் சசிகலாவால் வாங்கப்பட்ட ஜாஸ் சினிமா கைமாறிய கதை: பரபரப்பான பின்னணி

Report Print Fathima Fathima in இந்தியா

சசிகலாவிற்கு எவ்வளவு சொத்துக்கள் இருக்கிறது என்பது அவர்களது குடும்பத்துக்கே தெரியாத அளவில் உலகம் முழுவதிலும் சொத்துக்கள் வாங்கி குவிக்கப்பட்டுள்ளது.

இந்த சொத்துக்களை சசிகலாவின் அண்ணன், தங்கை, கணவர், சம்பந்தி வழிகள் என முழுக்க முழுக்க சசிகலா மற்றும் நடராஜன் குடும்பத்தினர்கள் பெயர்களிலேயே வாங்கிக் குவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2005-ம் ஆண்டு ஹாட் வீல்ஸ் இன்ஜினீயரிங் என்கிற நிறுவனத்தை சசிகலா தொடங்கினார். அந்த நிறுவனத்தின் சேர்மனாகவும் அவரே இருக்கிறார்.

அதன் பிறகு 2011ம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் அதிமுகவை விட்டு நீக்கப்பட்டு போயஸ் கார்டனை விட்டு சசிகலா துரத்தப்பட்ட பிறகு 2011 டிசம்பரில் ‘ஹாட் வீல்ஸ் இன்ஜினீயரிங் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தின் இயக்குநர்களாக ஜெயலலிதாவிற்கு உதவியாளராக போயஸ் கார்டனில் வலம் வந்த பூங்குன்றன் உட்பட 2 பேர் நியமிக்கப்பட்டனர்.

அதன் பிறகு சசிகலா மீண்டும் போயஸ் கார்டனுக்குள் உள்ளே வந்ததும் நவம்பர் 2012-ல் சுந்தரவதனத்தின் மருமகன் டாக்டர் சிவக்குமார், இளவரசியின் மருமகன் கார்த்திகேயன் இருவரும் இந்த நிறுவனத்தின் இயக்குநர்களாக ஆகின்றனர்.

சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்துக்கு மொத்தம் இரண்டு மகள்கள். ஒருவர் பிரபாவதி. மற்றொருவர் அனுராதா. இந்த அனுராதாவின் கணவர்தான் டிடிவி.தினகரன். மற்றொரு மகளான பிரபாவதியின் கணவர்தான் டாக்டர் சிவக்குமார்.

இந்த சிவக்குமார்தான் ஹாட் வீல்ஸ் இன்ஜினியரிங் நிறுவனத்தில் ஆக்டிவ் இயக்குநராகவும் மற்றொரு இயக்குநராக கார்த்திக்கேயன் கலியபெருமாள் நியமிக்கப்பட்டார். இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியாவின் கணவர்தான் கார்த்திக்கேயன்.

ஹாட் வீல்ஸ் இன்ஜினியரிங் நிறுவனத்தின் பெயரை ஜாஸ் சினிமாஸ் என்று திடீரென ஜுலை 2014ல் பெயர் மாற்றம் செய்துள்ளனர்.

2014-ம் ஆண்டு, சேர்மன் சசிகலாவின் முன்னிலையில், இளவரசியை மற்றொரு ‘ஷேர் பெர்சன்’ என்று அறிவித்துத் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

அதோடு, இளவரசி எந்த நாளில் சசிகலா முன்னிலையில் ‘ஷேர் பெர்சன்’ என்று நியமிக்கப்படுகிறாரோ அதே நாளில்தான் ‘ஹாட் வீல்ஸ்’ நிறுவனத்தின் பெயர், ‘ஜாஸ் சினிமாஸ்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

அதன் பின் ஹாட் வீல்ஸ் நிறுவனத்தில் தியேட்டர்கள், மல்டிப்பிளக்ஸ்கள், விளையாட்டு அரங்கங்கள், வீடியோ கேம் நிலையங்கள் ரெக்கார்டிங் நிலையங்கள் உள்ளிட்டவற்றை நடத்துவது என்று முடிவெடுத்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

இந்த தீர்மானம் நிறைவேற்றப் பட்ட பிறகு ஜாஸ் சினிமாவை சசிகலா வாங்க விலை பேசும் போது பீனிக்ஸ் மால் நிறுவனத்தினர் அந்த மாலில் உள்ள 11 தியேட்டர்களையும் பீனிக்ஸ் மால் கட்டத் தொடங்கப்பட்ட காலத்திலேயே சத்யம் சினிமாஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்திருந்தது.

சசிகலாவின் தரப்பில் சத்யம் நிறுவனத்தாரிடம் இந்த 11 தியேட்டர்களையும் தங்களுக்கு விலைக்கு கொடுக்குமாறு பேரம் பேசப்பட்டது.

சத்யம் சினிமா நிறுவத்தினர் சசிகலாவின் பேரத்திற்கு அடிபணியாமல் இருந்ததால் அந்த நிறுவனத்தின் முதலாளிகளான ஸ்வரூப் ரெட்டி மற்றும் அவர் உறவினர் சுஜய் ஆனந்த் ரெட்டி ஆகியோர் மீது நில அபகரிப்பு வழக்கு பதிவு செய்து அதன் பிறகு அவர்களை மிரட்டி வாங்கப் பட்டதாக புகார் எழுந்தது.

அதன் பிறகு ஜாஸ் சினிமாவின் சி.இ.ஓ.வாக இளவரசியின் மகன் விவேக் நியமிக்கப்படுகிறார். இப்படித்தான் ஜாஸ் சினிமாஸ் வாங்கப்பட்டது. இந்த விவகாரம் அப்போது பெரும் சர்ச்சையை உண்டாக்கி இருந்தது.

அதன் பிறகு சசிகலாவின் தரப்பில் ஜாஸ் சினிமா வாங்கப்பட்ட ஆவணங்கள் வெளியாகி தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை உண்டாக்கி இருந்தது. இப்போது அந்த நிறுவனத்தில்தான் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

- Dina Karan

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்