பெற்ற குழந்தையை கடத்தி நாடகமாடிய தந்தை: அதிர்ச்சி காரணம்

Report Print Raju Raju in இந்தியா

பணத்துக்காக பெற்ற குழந்தையை கடத்தி நாடகம் ஆடிய தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர்.

தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள கெல்லீஸை சேர்ந்தவர் ரவிக்குமார் (32) டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் மனைவி தமிழ் இலக்கியா (28) இவர்களுக்கு கனீஷ் (3) என்ற ஆண் குழந்தை உள்ளது.

மழலையர் பள்ளியில் சேர்க்கப்பட்ட கனீசை ரவிக்குமார் தினமும் பைக்கில் சென்று பள்ளியில் விடுவார்.

நேற்று முன்தினம் குழந்தையை பள்ளிக்கு அழைத்து சென்ற ரவிக்குமார் காலை 10 மணிக்கு தனது தந்தை பரமசிவத்துக்கு போன் செய்து தன்னை 4 பேர் கொண்ட கும்பல் தாக்கிவிட்டு கனீசை கடத்தி சென்று விட்டதாகவும் 5 லட்சம் கொடுத்தால் திரும்ப ஒப்படைத்து விடுவதாக தன்னிடம் கூறியதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து இலக்கியாவை அழைத்து கொண்டு பணத்துடன் வருவதாக பரமசிவம் ரவிக்குமாரிடம் கூறினார்.

பின்னர் ரவிக்குமார் வீட்டுக்கு வந்து ரூ.5 லட்சத்தை வாங்கி கொண்டு காரில் கிளம்பினார். அவருடன் பரமசிவனும், இலக்கியாவும் உடன் சென்றனர்.

போகும் வழியில் கடத்தல்காரர்கள் நான் மட்டும் தனியாக வரவேண்டும் என கூறியதாக தெரிவித்த ரவிக்குமார் உடன் இருந்த இருவரையும் கீழே இறக்கிவிட்டார்.

இதையடுத்து பரமசிவமும், இலக்கியாவும் ஆட்டோ மூலம் காவல் நிலையத்துக்கு சென்று இது குறித்து புகார் அளித்தனர்.

ரவிக்குமார் கொடுத்த கடத்தல்காரர்கள் செல்போன் எண்ணையும் பொலிசாரிடம் பரமசிவம் தெரிவித்தார்.

அதற்கு பொலிசார் போன் செய்த போது மறுமுனையில் பேசிய நபர், நான் குழந்தையை கடத்தவில்லை, வங்கியில் கிரெடிட் கார்ட் பிரிவில் பணிபுரிகிறேன்.

ரவிக்குமார் கிரெடிட் கார்டு மூலம் பெற்ற தொகையை திரும்ப செலுத்தவில்லை. எனவே அவருக்கு இந்த செல்போன் எண் மூலம் அவ்வப்போது எச்சரிக்கை விடுக்கப்பட்டு வந்தது என கூறினார்.

இதனால் ரவிக்குமார் மீது சந்தேகமடைந்த பொலிசார் அவர் சென்ற காரில் இருந்த ஜி.பி.எஸ் கருவி மூலம் அது எங்கே செல்கிறது என கண்காணித்தனர்.

பின்னர் ரவிகுமாரை காரை பின் தொடர்ந்த பொலிசார் அவருக்கு போன் செய்து நாங்கள் உடன் வருகிறோம், நீங்கள் பயப்பட வேண்டாம் என கூறினர்.

உடனே ரவிக்குமார், தான் குழந்தையை பத்திரமாக மீட்டுவிட்டதாகவும், காவல் நிலையத்துக்கு வருவதாகவும் கூறி அங்கு வந்தடைந்தார்.

இதையடுத்து ரவிக்குமார் மீது சந்தேகப்பட்ட பொலிசார் அவரை விசாரித்ததில், தானே தன்னுடைய குழந்தையை கடத்திவிட்டு நாடகமாடியது தெரியவந்தது.

இது குறித்து அவர் அளித்த வாக்குமூலத்தில், ஆடம்பரமாக வாழ வேண்டும் என்ற ஆசையில் பல வங்கிகளிடம் கிரெடிட் கார்டு பெற்றேன். அதன் மூலம் உல்லாசமாக வாழ்க்கையை கழித்து வந்தேன்.

பணம் காலியாக கிரெடிட் கார்டு கொடுத்த வங்கிகள் பணம் கட்ட சொன்னதால் மனைவியிடம் பணம் பறிக்க இப்படி செய்ததாக கூறியுள்ளார்.

இதையடுத்து ரவிக்குமாரை பொலிசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்