இந்தியாவில் குட்டியானை ஒன்றின் மேல் மர்ம கும்பல் தீயை கொளுத்தி போட்ட போது, அதை புகைப்படம் எடுத்த புகைப்படக் கலைஞர் பிப்லா ஹசாராவுக்கு, சிறந்த புகைப்பட கலைஞருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் குட்டி யானை ஒன்று சாலையை கடக்க முயன்ற போது, அதன் மீது மர்மநபர்கள் சிலர் தீயை கொளுத்தி போட்டதில், அந்த யானையின் உடல் தீப்பற்றி எரிகிறது, அதன் உடன் இருந்த யானையின் கால்களிலும் தீப்பற்றி எரிந்ததால், இரு யானைகளும் உயிருக்கு பயந்து ஓடுகின்றன.
இதை வன உயிரினப் புகைப்படக் கலைஞர் பிப்லா ஹசாரா தத்ரூபமாக புகைப்படம் எடுத்து பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில் இந்த ஆண்டு ஆசியா முழுவதும் எடுக்கப்பட்ட 5,000 புகைப்படங்களிலிருந்து சிறந்த புகைப்படமாகப் பிப்லா ஹஸ்ராவின் இந்த புகைப்படம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான விருதை மும்பையைச் சேர்ந்த Sanctuary Nature Foundation என்ற அமைப்பு வழங்கியுள்ளது.
இது குறித்து அவர் கூறுகையில், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில், யானை மற்றும் மனிதர்களுக்கிடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.
இதன் காரணமாக மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது.
இதனால் யனைகளும் கொல்லப்படுகின்றன. உயிர்ச் சங்கிலியின் அதிமுக்கியமான யானை இனத்தைக் அழிப்பது நம்மை நாமே அழித்து கொள்வதற்கு சமம், இதனால் யானை இனத்தை காப்பது குறித்து அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.