பத்து கட்டளைகள் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துமா?

Report Print Fathima Fathima in இந்தியா

டந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் சி.ரங்கராஜன் தலைமையில் பொருளாதார ஆலோசனைக் குழு செயல்பட்டு வந்தது.

ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தப் பிறகு பொருளாதார ஆலோசனைக் குழு அமைக்கப்படவில்லை.

ஆனால் தற்போது பொருளாதார ரீதியில் இந்தியா மிகப் பெரிய பின்னடைவை சந்தித்து வருகிறது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 5.7 சதவீதமாக குறைந்தது. பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி போன்ற காரணங்களால்தான் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறைந்தது என எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வரும் சூழலில் பிரதமர் மோடி, நிதி ஆயோக் உறுப்பினர் பிபேக் தேப்ராய் தலைமையில் பொருளாதார ஆலோசனைக் குழுவை அமைத்தார். பொருளாதார நிபுணர் சுர்ஜித் பாலா, ரத்தீன் ராய், அசிமா கோயல், ரத்தன் பி வாட்டாள் ஆகியோர் இந்தக் குழுவில் உறுப்பினரகளாக நியமிக்கப்பட்டனர்.

இந்தக் குழு அமைக்கப்பட்டதற்கு வேறு ஒரு பின்னணி இருக்கலாம் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட் 2018-ம் ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

அதை முன்னிட்டே தற்போது பொருளாதார ஆலோனைக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது என்ற கருத்தும் நிலவுகிறது. இவர்களின் பரிந்துரைகளை ஆராய்ந்து அதற்கேற்ப பட்ஜெட்டை வடிவமைக்கும் திட்டத்தில் மத்திய அரசு இருப்பதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த வாரத்தில் இந்தக் குழுவின் முதல் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு பேசிய பிபேக் தேப்ராய், இந்திய பொருளாதாரம் சரிந்துள்ளது என்பதை ஒப்புக் கொள்கிறோம். ஆனால் அதற்கான காரணங்களை பிரதமரிடம் மட்டுமே தெரிவிப்போம்’’ என்று கூறியிருக்கிறார்.

மேலும் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு பத்து விஷயங்களை கண்டறிந்துள்ளது. பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு, பொது செலவினம், நிறுவனங்களின் பொருளாதார நிலையை நிர்வகிப்பது, முறைசாரா பொருளாதாரம், நிதி கட்டமைப்பு, நிதிக் கொள்கை, வேளாண்மை மற்றும் கால்நடை, நுகர்வு மற்றும் உற்பத்தி முறை, சமூகத் துறை ஆகிய 10 விஷயங்களில் பரிந்துரைகளை வழங்கப்போவதாக பிபேக் தேப்ராய் தெரிவித்துள்ளார்.

இந்த 10 விஷயங்களும் நாட்டின் பொருளாதார அடிப்படை காரணிகளை மேம்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சங்கங்களோடு பேச்சுவார்த்தை நடத்திய பிறகே இந்த 10 துறைகளில் பிரச்சினைகளை அடையாளம் காணமுடியும்.

அதன் பிறகு பரிந்துரைகளை வழங்க முடியும். பொருளாதாரம் சரிவைக் கண்டு வரும் சூழலில் இந்த நீண்ட கால நடவடிக்கைகள் உதவுமா என்பது தெரியவில்லை. அதுமட்டுமல்லாமல் ஏற்கெனவே அறிவித்த திட்டங்களின் நிலை என்ன என்பதும் வெளிப்படையாக மத்திய அரசு அறிவிக்கவில்லை.

அதுமட்டுமல்லாமல் கடந்த காலாண்டில் வளர்ச்சி விகிதம் குறைந்ததை உடனடியாக சரிசெய்வதற்கு உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டிய தேவை இருக்கிறது.

பொருளாதாரத்தை முடுக்கி விடும் உடனடி நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே தற்போதைய இந்திய சூழல் சரியாகும். அடுத்த ஓரிரு மாதங்களில் இந்தக் குழுவின் செயல்பாடு என்ன என்பது தெளிவாக புலப்படும். பொறுத்திருப்போம்.

- Thehindu

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்