கேரள மேகங்களால் தான் ஜப்பானில் மழை பெய்கிறது: எம்எல்ஏவின் காமெடி பேச்சு

Report Print Deepthi Deepthi in இந்தியா

ஜப்பானில் மழை பெய்ய கேரள மேகங்கள் தான் காரணம் என நிலம்பூர் தொகுதி எம்எல்ஏ கூறியுள்ளது மக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், மீம்ஸ்களையும் தெறிக்கவிட்டுள்ளனர்.

மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் தொகுதியில் கடந்த தேர்தலில் இடது முன்னணி ஆதரவுடன் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அன்வர்.

கோழிக்கோடு மாவட்டம் கக்காடம்பொயில் என்ற மலைவாசஸ்தலத்தில் பல கோடி ரூபாய் செலவில் ஒரு வாட்டர் தீம் பார்க்கை அமைத்தார்.

கடல் மட்டத்திலிருந்து 2000 அடிக்கு மேல் அமைக்கப்பட்டுள்ள இந்த பார்க்கிற்கு கக்காடம்பொயில் பஞ்சாயத்திடமிருந்து முறையான அனுமதி பெறவில்லை. மேலும் இந்த வாட்டர் தீம் பார்க்கின் தண்ணீர் தேவைக்காக மலையில் இவர் ஒரு தடுப்பணையையும் கட்டியுள்ளார். இந்த தடுப்பணை காரணமாக மலைப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினரின் குடிநீர் ஆதாரமும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அன்வர் எம்.எல்.ஏ.வின் வாட்டர் தீம் பார்க்கை கண்டித்து எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் குதித்தன. போராட்டம் தீவிரமடைந்ததை தொடர்ந்து அன்வர் எம்.எல்.ஏ. சமீபத்தில் கோழிக்கோட்டில் பத்திரிகையாளர்களுக்கு ஒரு பேட்டியளித்தார்.

கேரளாவில் ஜப்பான் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஜப்பான் அரசு தான் கேரள குடிநீர் திட்டத்திற்கு பணம் செலவழிக்கிறது.

கேரள குடிநீர் திட்டத்திற்கு ஜப்பான் ஏன் பணம் செலவழிக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா? கேரளாவில் உருவாகும் மழை மேகங்கள் தான் ஜப்பானுக்கு சென்று மழையை உருவாக்குகிறது. கேரளாவில் மழை மேகங்கள் உருவாக வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? வனப்பகுதியை அதிகரிக்க வேண்டும். வனபகுதி அதிகரித்தால் மழை மேகங்கள் உருவாகும்.

இதனால் கேரளாவில் மழை பெய்யும். பின்னர் கடல் நீர் ஆவியாகி மழை மேகங்களாகி ஜப்பானுக்கு செல்லும். இதனால் தான் ஜப்பானில் மழை பெய்கிறது என்று அவர் சம்பந்தமில்லாமல் பேசியுள்ளார்.

அன்வர் எம்.எல்.ஏ.வின் இந்த புதிய கண்டுபிடிப்பு குறித்து தான் கேரளாவில் இப்போது காமெடி பேசிக்கொண்டிருக்கின்றனர். வாட்ஸ் அப், பேஸ்புக் உட்பட சமூக இணையதளங்களிலும் அன்வரின் புதிய கண்டுபிடிப்புகள் தான் மீம்சுகளாக கலக்கிக் கொண்டிருக்கின்றன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்