கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி

Report Print Raju Raju in இந்தியா

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாக கருதி கணவரை, மனைவியும் கள்ளக்காதலனும் சேர்ந்து கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கணேஷ் (39) விவசாயம் செய்து வருகிறார். இவர் மனைவி ரேவதி (25) இவர்களுக்கு திருமணமாகி 9 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை.

பட்டப்படிப்பு படித்தவரான ரேவதி பள்ளிக்கூடத்தில் ஆசிரியை பணி செய்து வந்தார். படித்த தனக்கு, கணேசை திருமணம் செய்து வைத்து விட்டார்களே என்று ரேவதி கருதியதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக கணவன் மற்றும் மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், கடந்த மே மாதம் 31ஆம் திகதி கணேஷ் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதையடுத்து அவரின் சடலத்தை குடும்பத்தார் புதைத்தார்கள்.

கணேஷ் மரணத்துக்கு பின்னர் ரேவதி அவரை பற்றி கவலைபடாமல் வேறு யாருடனோ மணிக்கணக்கில் செல்போனில் சிரித்து பேசுவதை பார்த்த கணேஷின் அண்ணன் சிவகுமாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இந்நிலையில், தம்பியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவர் பொலிசில் புகார் அளித்தார்.

இதையடுத்து பொலிசார் ரேவதியிடம் நடத்திய விசாரணையில், அவருக்கு சத்யராஜ் (29) என்ற பேருந்து ஓட்டுனருடன் கள்ளக்காதல் இருந்ததும், இருவரும் சேர்ந்து கணேஷை கொலை செய்ததும் தெரியவந்தது.

மேலும், படிக்காத, அழகில்லாத விவசாயிக்கு தன்னை திருமணம் செய்து வைத்து விட்டார்களே என்ற வருத்தத்தில் ரேவதி இருந்ததும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து சத்யராஜை பொலிசார் கைது செய்தார்கள். அவர் அளித்த வாக்குமூலம் குறித்து பொலிசார் கூறுகையில், சத்யராஜ் ஓட்டுனராக இருக்கும் பேருந்தில் ரேவதி சென்ற போது அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டு பின்னர் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இது குறித்து கணேஷுக்கு தெரியவர கண்டித்துள்ளார்.

இதனிடையில், சத்யராஜை திருமணம் செய்ய ரேவதி முடிவெடுத்த நிலையில் அதற்கு கணேஷ் தடங்கலாக இருப்பார் என இருவரும் கருதியுள்ளனர்.

இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்ட இருவரும், இரவில் தூங்கி கொண்டிருந்த கணேஷ் கழுத்தை இறுக்கியுள்ளனர்.

அதாவது துப்பட்டா மூலம் கணேஷின் கழுத்தை சத்யராஜ் இறுக்கியபோது, உயிர்போகும் நிலையில் துடித்த கணேஷின் கால்களை ரேவதி அழுத்தி பிடித்துள்ளார்.

இதையடுத்து கணேஷ் துடிதுடித்து இறந்துள்ளார்.

காலையில் தனது கணவர் இயற்கையாகவே மரணம் அடைந்து விட்டார் என்று தேம்பி தேம்பி அழுது ரேவதி நடித்துள்ளார்.

இதனால் யாருக்கும் அப்போது சந்தேகம் ஏற்படவில்லை.

இவ்வாறு பொலிசார் கூறியுள்ளனர். இதையடுத்து சத்யராஜை கோர்ட்டில் ஆஜர்படுத்திய பொலிசார் பின்னர் சிறையில் அடைத்தனர்.


மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments