ஒரே போன் காலில் மாறிய வாழ்க்கை: ஆசிட் வீச்சு தாக்குதல் பெண்ணின் நெகிழ்ச்சி தருணம்

Report Print Raju Raju in இந்தியா

ஆசிட் வீச்சு தாக்குதலில் முகம் முழுவதும் வெந்து போன இளம் பெண்ணை இளைஞர் ஒருவர் காதலித்து திருமணம் செய்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் லலிதா (26), கடந்த 2012ல் லலிதாவின் உறவுகார இளைஞர்கள் சிலர் குடும்ப பகை காரணமாக அவர் முகத்தில் ஆசிட் வீசியுள்ளனர்.

இதில் லலிதாவின் முகம் முழுவதும் வெந்த நிலையில், அவர் முகத்தில் இதுவரை 17 சர்ஜரிகள் நடந்துள்ளன.

ஆனால், தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து வந்த லலிதா சில மாதங்களுக்கு முன்னர் தவறுதலாக ஒரு நம்பருக்கு தனது செல்போனிலிருந்து போன் செய்துள்ளார்.

எதிர்முனையில் ராகுல் (27) என்னும் நபர் போனை எடுத்து பேசியுள்ளார். ராங் காலில் ஆரம்பித்த ராகுல், லலிதாவின் நட்பு பின்னர் காதலாக மாறியுள்ளது.

வாழ்க்கையில் தனக்கு நடந்த கொடூரமான விடயங்களை பற்றி லலிதா, ராகுலிடம் மனம் திறந்து கூறியுள்ளார்.

அதன் பின்னர் லலிதா-வின் வெளி அழகை பார்க்காத ராகுல், அவர் நல்ல மனதை பார்த்து அவரை திருமணம் செய்ய முடிவெடுத்தார்.

இதையடுத்து இவர்களின் திருமணம் நேற்று கோலாகலமாக நடைப்பெற்றது. இவர்களின் புனிதமான காதலை அறிந்த இந்தி திரைப்பட உலகின் நட்சத்திரங்கள் பலர் அவர்கள் திருமணத்துக்கு பண உதவி செய்துள்ளனர்.

எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தி திரைப்பட நடிகர் விவேக் ஓப்ராய், லலிதா - ராகுல் திருமணத்தில் கலந்து கொண்டதோடு அவர்களுக்கு அடுக்குமாடி வீடு ஒன்றையும் பரிசளித்துள்ளார்.

திருமணமான மகிழ்ச்சியில் பேசிய லலிதா, எனக்கு திருமணம் ஆகும் என நான் நினைத்தே பார்க்கவில்லை.

என் நிலைமையை பற்றி தெரிந்தும் ராகுல் என்னை திருமணம் செய்து கொண்டுள்ளார் என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

ராகுல் கூறுகையில், வாழ்க்கையில் வித்தியாசமாக ஏதாவது செய்ய எனக்கு எப்போதும் தோன்றும், லலிதாவை திருமணம் செய்ய என் மொத்த குடும்பமும் எனக்கு துணையாக இருந்தனர்.

ஒரு ராங் கால் என் வாழ்க்கையையே மாற்றும் என நான் எதிர்பார்க்கவில்லை என கூறியுள்ளார்.

ராகுல்- லலிதா தம்பதிகள் வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என நடிகர் விவேக் ஒப்ராய் வாழ்த்தியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments