தமிழகத்தை உலுக்கிய இரு மரணங்கள்: திவ்யாவை சந்தித்த கவுசல்யா

Report Print Deepthi Deepthi in இந்தியா

ஆசையாக காதலித்து ஜாதி காரணமாக உயிரிழந்த சங்கர் மற்றும் தர்மபுரி இளவரசன் ஆகிய இருவரின் மரணங்களையும் தமிழகம் அவ்வளவு எளிதில் மறக்காது.

கடந்த 2013 ஆம் ஆண்டு தர்மபுரியை சேர்ந்த இளவரசனுக்கும் அவரது மனைவி திவ்யாவுக்கு இடையே ஜாதி பிரச்சனை மற்றும் சட்டரீதியான வாக்குவாதங்கள் நடைபெற்று வந்த நிலையில் இளவரசன் மர்மமான முறையில் தற்கொலை செய்துகொண்டார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் 13-ம் திகதியன்று, உடுமலை மத்தியப் பேருந்து நிலையம் எதிரில், இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர், புதுமண ஜோடிகளான கவுசல்யா மற்றும் சங்கரை பட்டப்பகலில் அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.

இதில், சங்கர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார், கவுசல்யாக அறுவை சிகிச்சைக்கு பின்னர் உயிர் பிழைத்தார்.

இந்த இரண்டு சம்பவங்களும் தமிழக மக்களின் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.

தங்கள் மனதுக்கு பிடித்தவனை காதலித்து திருமணம் செய்துகொண்ட காரணத்தால் இந்த இரு பெண்களும் தற்போது ஒருவித போராட்டத்தோடு தங்கள் வாழ்க்கைளை வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் கவுசல்யா, திவ்யாவை சந்தித்தது குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், "இன்று என்னை அறிமுகமில்லாத ஒரு தோழரை, அவங்க வீட்டுக்குப் போய் சந்திச்சேன். ஆனா? அவங்களப்பத்தி எனக்கு நெறையா அறிமுகமிருக்குது. அந்த தோழரை சந்திச்சுப் பேசற வரைக்கும், அவங்கமேல இருந்த "எண்ணம்" வேற.

எங்களுக்கு முன்னாடி தமிழ்நாடே ஒட்டுமொத்தமா, அந்த கொடூர நிகழ்ச்சியத் திரும்பிப் பாத்தாங்க. ரெண்டு பேரு, மனசுக்குப் புடுச்சவங்கள காதலிச்சலிச்சுக்கிட்டதுக்காக!

எங்க சாதிப் பொண்ணை காதலிச்சுட்டான்னு, தன்னோட அவங்க ஊர்ல இருக்கற, தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருக்கற, 300 ருக்கும் மேற்பட்ட வீடுகளை கொழுத்துனாங்க. கலவரம் நடந்துச்சு. ஏராளமான, பொதுமக்கள் அதுல பாதிக்கப்பட்டாங்க.

இவங்களுக்கான வழக்கு நீதிமன்றத்துல நடந்துட்டு இருக்கும்போதே, இவங்க ரெண்டுபேரையும் பிரிச்சு வச்சுட்டாங்க. அவங்களுடைய, காதலனும் "மர்மமான" முறையில,,,,,,,,,

ஆனா? இன்னைக்கு அவங்கள சந்திச்சு பேசனதுக்குப் பிறகு, அவங்கமேல ஏற்பட்ட மரியாதைங்கறது வேற... ஆமாம். நான், "திவ்யா இளவரசனை" சந்தித்தேன். அவங்களும், அவங்க அம்மாவும் மட்டுந்தா அந்த வீட்டுல இருக்காங்க.

இப்ப கல்லூரிக்கு போய்ட்டு, வந்துட்டு இருக்காங்க. வீட்டவிட்டு வெளில எங்கேயுமே வருவதில்லை. அக்கம், பக்கம் உள்ளவங்க "எல்லாரும்" அவங்களோட ஒவ்வொரு அசைவையும், "இந்த நிமிசம் வரைக்கும்" கண்ணு காது வச்சு பேசிக்கிட்டுதான் இருக்காங்கங்கறதால!

ஒரு "பொட்டு" வச்சுக்கிட்டு சாதரணமா வெளில வந்தாக்கூட, "இவளுக்கென்ன பழசெல்லாம் மறந்துட்டு நல்லாதா இருக்கா" ன்னு அவங்க வீட்ட சுத்தி உள்ளவங்க சொல்றாங்க.

இப்படி, நிறைய விசயத்துல அவங்க மனசளவுல பாதிக்கப்பட்டிருக்காங்க. அதனால, வீட்டுக்கு வெளில நடக்கற செய்தி எதுவும் அந்த தோழருக்கு தெரியறது இல்ல. அவங்ககிட்ட நான் ரொம்ப நேரமெல்லாம் பேசறதுக்கு வாய்ப்பு கிடைக்கல.

அவங்களால மனசுவிட்டும் எங்கிட்ட பேசமுடியல. அவங்க அம்மா பக்கத்துலேயே நின்னுட்டு இருந்ததாலன்னு நான் புரிஞ்சுக்கிட்டேன். கிடைச்ச நேரத்துல பேசிக்கிட்டு இருக்கும் போது, நான் ஒரு கேள்வி கேட்டேன். "உங்களால எப்படி இயல்பா இருக்க முடியுது?"னு கேட்டேன்.

அதுக்கு அவங்க "நான் ரசித்து ரசித்து காதலித்த ஒருவனின் நினைவையும், நிகழ்வையும் என்னால் எப்படி எளிமையாக மறந்துவிட முடியும்"னு சொன்னாங்க" எனப் பதிவிட்டிருக்கிறார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments