சவுதியில் இறந்து போன தமிழர்கள்: கண்ணீர் விட்டு கதறும் குடும்பத்தினர்

Report Print Deepthi Deepthi in இந்தியா

சவுதி அரேபியாவில் உயிரிழந்த தமிழக மீனவர்களின் உடல்களை சொந்த நாட்டிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் பழனிச்சாமி அவர்கள், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சவுதி அரேபியா கடலில் கன்னியாகுரி மாவட்டத்தின் கடலோர கிராமத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள் இறந்துபோன பரிதாபமான சம்பவம் குறித்து உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். ஜீசஸ் என்பவருடைய மகன் ஜார்ஜ், பயஸ் என்பவருடைய மகன் நெவில், வஸ்தியன் என்பவருடைய மகன் ஜோசப் ஆகியோர் மரணமடைந்துவிட்டனர்.

இவர்கள் சவுதி அரேபியாவைச் சேர்ந்த ஒருவருடன் இணைந்து, 17-ந் தேதியன்று அங்குள்ள தரின் மீன்பிடி தளத்தில் இருந்து மீன்பிடிப்பதற்காக சென்றனர். சவுதி அரேபியாவைச் சேர்ந்தவருக்கு சொந்தமான மீன்பிடி படகில் சென்று மீன்பிடித்துக்கொண்டிருந்தனர்.

18-ந் தேதியன்று அவர்கள் இருந்த படகு விபத்துக்கு உள்ளானது. அந்த விபத்தில் காணாமல் போன ஜார்ஜ் மற்றும் ஜோசப் ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டன.

சவுதி அரேபியாவில் ஒப்பந்த அடிப்படையில் அவர்கள் 3 பேரும் பணியாற்றி வந்தனர். அவர்களின் மறைவு அவர்களின் குடும்பத்தை நிலைகுலையச் செய்துவிட்டது. நெவிலை தேடுவதற்கும், இறந்துபோனவர்களின் உடலின் மீதி பாகத்தை இங்கு கொண்டு வருவதற்கும், அவர்களின் முதலாளியிடம் இருந்து இழப்பீட்டு நிதியைப் பெறவும் அரசாங்க ரீதியான உதவி தேவைப்படுகிறது.

எனவே சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகத்திடம் பேசி விரைவான நடவடிக்கை எடுக்க நீங்கள் உத்தரவிட வேண்டும். எந்த காலதாமதமும் இல்லாமல் அந்த 3 பேரின் குடும்பத்தினருக்கும் பண உதவி கிடைப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய தூதரகத்துக்கு உத்தரவிட வேண்டும்.

மேலும் 3 வெவ்வேறு நிகழ்வுகளில் 35 இந்திய மீனவர்களை ஈரான் கடலோர பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.

முதல் நிகழ்வில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள், சவுதி அரேபியாவைச் சேர்ந்த உரிமையாளருக்கு சொந்தமான படகில் கடந்த 5.8.16 அன்று மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக ஈரான் கடல் பகுதிக்கு சென்றுவிட்டனர். அவர்களை ஈரான் கடலோர பாதுகாப்பு படையினர் கைது செய்து அங்குள்ள 7.8.16 அன்று முதல் பஞ்சார் ஜெயிலில் அடைத்துவிட்டனர்.

இரண்டாவது நிகழ்வில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள், பக்ரைன் முஹாராக் மீன்பிடி தளத்தில் இருந்து 3 எந்திர படகில் கடந்த ஆண்டு செப்டம்பர் 20-ந் தேதியன்று சென்றனர்.

அப்போது அவர்கள் கவனக்குறைவாக ஈரான் கடல் எல்லைக்குள் சென்றுவிட்டனர். ஈரான் கடலோர பாதுகாப்பு படையினரால் அவர்கள் கைது செய்யப்பட்டு கிஷ் தீவு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை உரிமையாளர் செலுத்திவிட்டார். ஆனாலும் இன்னும் அவர்களை ஈரான் அதிகாரிகள் விடுவிக்கவில்லை.

3-வது நிகழ்வில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள் துபாய்க்கு சென்றிருந்தனர். அவர்களும் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது கவனக்குறைவாக ஈரான் கடல் பகுதிக்குள் சென்றதால், அங்குள்ள கடலோர பாதுகாப்பு படையினர் அவர்களைக் கைது செய்து 27.12.16 அன்றிலிருந்து கிஷ் தீவு சிறையில் அடைத்துவிட்டனர்.

அந்த அப்பாவி மீனவர்களை உடனடியாக விடுவிப்பதற்காக அரபு எமிரேட்ஸ், பக்ரைன், சவுதி அரேபியா ஆகிய இடங்களில் உள்ள இந்திய தூதரகத்துடன் நீங்கள் பேசி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இதற்காக மத்திய வெளியுறவுத் துறையை முடுக்கிவிட வேண்டும் என்று எழுதியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments