ரஜினி- கருணாஸ் சந்திப்பு: அரசியலுக்கான அச்சாரமா?

Report Print Arbin Arbin in இந்தியா

பரபரப்பான தமிழக அரசியல் சூழலில் நடிகரும், அதிமுக எம்எல்ஏவான கருணாஸ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக எம்எல்ஏவான கருணாஸ் சசிகலா அணிக்கு ஆதரவு தெரிவித்ததால் பொதுமக்களின் கடும் எதிர்ப்புக்கு உள்ளானார். அவர் வெற்றி பெற்ற திருவாடனை தொகுதிக்கு சென்ற போது கார் மீது மக்கள் செருப்பு வீசி விரட்டி அடித்தனர்.

மேலும் கருணாஸூக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி சமூக வலைதளத்தில் கிண்டல் செய்ததால் அதிர்ச்சி அடைந்த கருணாஸின் மனைவி கிரேஸ் மாரடைப்பு ஏற்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் கருணாஸ் ரஜினிகாந்தை சந்தித்தது மிக முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், மரியாதை நிமித்தமாக ரஜினியை சந்திக்க வந்ததாக கூறியுள்ளார்.

ரஜினிகாந்தின் பாட்ஷா திரைப்படம் டிஜிட்டல் முறையில் நாளை வெளியாக இருப்பதால் அதற்கு மகிழ்ச்சி தெரிவிக்க வந்ததாக தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு அரசியல் சம்பந்தமானது இல்லை என்றும், ரஜினி ரசிகன் என்ற முறையில் அவரை சந்திக்க வந்ததாகவும் கருணாஸ் விளக்கம் அளித்துள்ளார்.

ஆனாலும் உண்மை என்ன என்பது விரைவில் வெளிவரும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments