ஜல்லிக்கட்டு போராட்டம் எதிரொலி: காளை பந்தயத்திற்கு அனுமதி கேட்கும் சிவசேனா!

Report Print Arbin Arbin in இந்தியா

ஜல்லிக்கட்டுக்குக்கு அவசர சட்டம் இயற்றப்பட்டதை தொடர்ந்து காளை பந்தயம் நடத்த அனுமதி அளிக்குமாறு மகராஷ்டிர அரசை சிவசேனா கட்சி வலியுறுத்தியுள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக் கோரி தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் இளைஞர்களின் தன்னெழுச்சிப் போராட்டம் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

போராட்டத்தின் விளைவாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டதன் எதிரொலியாக இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் பாரம்பரிய விளையாட்டுகள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது.

காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகள் விலக்கப்பட்டதினால் எப்படி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டதோ அதே போல மகராஷ்டிராவின் பாரம்பரிய விளையாட்டான மாட்டுப் பந்தயமும் தடை செய்யப்பட்டது.

தற்போது ஜல்லிக்கட்டு போராட்டத்தின் வெற்றி எதிரொலியாக மகராஷ்டிர மாநிலத்தில் மாட்டுப் பந்தயம் நடத்த அனுமதி அளிக்குமாறு அம்மாநில அரசை சிவசேனா கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை மாட்டுப் பந்தயத்திற்கான தடையை நீக்கக் கோரி நாசிக் பகுதியில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர் சிவசேனா எம்.பி சிவாஜிராவ் தலைமையில் கூடி போராட்டம் நடத்தியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மகராஷ்டிராவிலும் மாட்டுப் பந்தயம் மீதான தடையை அம்மாநில அரசு நீக்க வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கத் துவங்கியுள்ளது.

இது தமிழகத்தில் நடைபெறும் ரேக்ளா ரேஸ் போல நடத்தப்படும். இந்த மாட்டுப் பந்தயத்தில் 400 மீற்றர் தூரத்தை எந்த மாட்டு வண்டி முதலில் கடக்கிறதோ அது வெற்றி பெற்றதாக கருதப்படும். கடந்த ஆண்டு தடையை மீறி மாட்டுப் பந்தயம் நடத்தியதாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது மகராஷ்டிராவின் ஆளும் பிஜேபி அரசில் சிவசேனா கட்சி கூட்டணிக் கட்சியாக உள்ளது. அடுத்த வாரம் மாட்டுப் பந்தயம் மீதான தடையை நீக்கக் கோரி போராட்டங்களை துவங்க உள்ளதாகவும் சிவசேனா கட்சி அறிவித்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments