அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமனம்! கண்ணீருடன் ஏற்றுக்கொண்டார் - உடனுக்குடன் பதிவுகள்

Report Print Deepthi Deepthi in இந்தியா

தற்போது நடைபெற்று வரும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியில் தலைமை பொறுப்பு சசிகலாவிடம் ஒப்படைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று இந்திய நேரப்படி 9.30 மணிக்கு ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் தொடங்கியுள்ளது.

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன, இதனை எடப்பாடி பழனிச்சாமி முன்மொழிந்தார்.

ஜெயலலிதாவின் நினைவைப் போற்றும் வகையில் ஜெயலலிதாவின் இருக்கை அரங்கில் வைக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் ஓ.பி.எஸ் பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கண்ணீர் மல்க உரையாற்றினார்.

முன்னதாக வி.கே.சசிகலாவிடம் தலைமைப் பொறுப்பு ஒப்படைக்கப்படுவதற்கான தீர்மானம் முன்மொழியப்பட்டது.

சசிகலாவின் தலைமைக்கு விசுவாசுவத்துடன் பணியாற்ற பொதுக்குழு உறுதியேற்கிறது எனத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை வழிமொழிந்து பொதுக்குழு உறுப்பினர்கள் இசைவு தெரிவித்தனர்.

ஜெயலலிதாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு

எல்லோருக்கும் எப்பொழுதும் சத்தான உணவு என்பது சாத்தியமான லட்சியமே என்பதை மெய்ப்பித்த முதலமைச்சர் அம்மாவுக்கு, மானுட சேவைக்கான பிலிப்பன்ஸ் நாட்டின் ரமோன் மக்சையாய் விருது மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட ஏற்பாடுகளை செய்தல் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள்
  • முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம்.
  • சசிகலாவின் தலைமையின் கீழ் விசுவாசத்துடன் பணியாற்ற உறுதி ஏற்று தீர்மானம்.
  • முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை 'தேசிய விவசாயிகள் தினம்' என்று அறிவிக்கவும், நாடாளுமன்றத்தில் ஜெயலலிதாவின் வெண்கலச் சிலையை நிறுவவும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து தீர்மானம்.
  • ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு கோரிக்கை முன்வைத்து தீர்மானம்.
  • ஜெயலலிதாவுக்கு மானுட சேவைக்கான பிலிப்பைன்ஸ் நாட்டின் ரமோன் மகசசே விருது மற்றும் உலக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என தீர்மானம்.
  • எம்ஜிஆர் நூற்றாண்டினை மக்கள் பணி ஆண்டாக அணுசரிக்க தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்து தீர்மானம்.
  • ஒவ்வொர் ஆண்டும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தன்று அதிமுக தொண்டர்கள் ஒன்றுகூடி கழக ஒற்றுமைக்கு உறுதியேற்பர்.

பொதுச்செயலாளராக சசிகலா நியமனம்

அதிமுக பொதுச்செயலாளராக கட்சியின் சட்ட திட்ட விதிகளுக்கு உட்பட்டு சசிகலா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தம்பிதுரை ஆகியோரும் போயஸ் தோட்டத்துக்கு சென்று சசிகலாவை சந்தித்து தீர்மானத்தை வழங்கினர்.

பொதுக்குழு தீர்மானத்தை சசிகலா கண்ணீர் மல்க வாங்கியுள்ளார்.

மேலும் அதிமுக பொதுச்செயலாளராக முழுமனதுடன் சசிகலா சம்மதம் தெரிவித்துள்ளார் என்றும் பொதுக்குழு தீர்மானம் சசிகலாவிடம் அளிக்கப்பட்டது என்றும் ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments