ஜெயலலிதா மரணத்திற்கு யார் காரணம்? மறைமுகமாக போட்டுத் தாக்கிய சீமான்!

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் இரண்டு வாரங்கள் கடந்த நிலையில், அவரது மறைவு தொடர்பான சந்தேகங்கள் இன்னும் தீர்ந்தபாடில்லை. பல்வேறு தரப்பினரும் ஜெயலலிதா மறைவு தொடர்பாக சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். அவரது மரணம் தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், ஜெயலலிதா மரணம் குறித்து கூறுகையில், முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் திரைப்பிரபலங்கள் பலரும் சந்தேகங்கள் இருப்பதாக தெரிவித்து வருகின்றனர். அதைத் தான் ஆதரிப்பதாகவும், அது அவர்களுக்கு மட்டுமில்லை, தனக்கும் அதே சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார்.

சுமார் 75 நாட்கள் மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த போது, குணமாகிவிட்டார் விரைவில் வீடு திரும்புவார் என்று கூறி கொண்டிருந்த நிலையில், திடீரென்று இந்த நிகழ்வு எப்படி நடந்தது என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அவர் நன்றாக இருக்கிறார், விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என கூறியிருந்தனர். அப்போது அவருக்காக பல லட்சம் பேர் கோவில்களில் வழிபாடு செய்தனர் மற்றும் சொல்ல முடியாத அளவிற்கு எல்லாம் வேண்டுதல்கள் செய்தனர், அப்போது அவர் தொடர்பாக எதாவது ஒன்றை (பேசவைத்திருந்தால்) வெளியிட்டிருந்தால் இந்த குளறுபடியே வந்திருக்காது எனவும் கூறியுள்ளார்.

அவரை கடைசியாக சட்டசபையில் பேசிய போது பார்த்தோம், அதன் பின் நள்ளிரவில் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி வந்தது, அதன் பின்னர் உயிரற்ற நிலையில் தானே அவர் இராஜாஜி ஹாலில் இருந்தார். இந்த இடைப்பட்ட காலத்தில் என்ன நடந்தது என்பதே தெரியவில்லை.

பேரறிஞர் அண்ணா கடந்த 1969 ஆம் ஆண்டு இறந்தார். அப்போது யாரும் உடனடியாக முதலமைச்சர் ஆக வில்லையே, அவர் பூத உடல் புதைத்த பின்பு, பொதுக் குழு கூட்டிய பின்பு தான் கலைஞர் அவர்கள் முதலைமைச்சராக பொறுப்பு ஏற்றார் என சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜெயலலிதா இறந்த உடனே பதவி பிரமானம் ஏற்பது, அவர் சிறையில் இருந்த போது கண்ணீர் வடித்த சிலர் , இறந்த பின்பும் ஒரு துளி கண்ணீர் கூட வரவில்லையே, மேலும் சிலர் செல்பி எடுத்ததைப் பார்த்தோம். இதனால் அவர்கள் எந்த மனநிலையில் இருக்கிறார்கள் என்று புரியவில்லை என கூறியுள்ளார்.

அதைத் தொடர்ந்து ஜெயலலிதா மரணத்தில் சந்தேகமென்றால், தொடர்ந்து 75 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், பெரும்பாலான நாட்களில் திரவ உணவையே எடுத்துக் கொண்டார் , ஆனால் உடல் நிலை சற்று கூட குறைய வில்லையே அது எப்படி, ஜெயலலிதா முடிகள் பெரும்பாலும் நரைத்து காணப்பட்டன, ஆனால் கருப்பாக இருந்ததே அது எப்படி, கருப்பு நிற சாயம் அடித்திருந்தாலும், அப்ப மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்தீர்களா அல்லது மை அடித்துக் கொண்டிருந்தீர்களா என்பது தொடர்பான பல்வேறு கேள்விகள் எழும்புவதாக கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி ஜெயலலிதா முதல்வராக இருந்த போது ஜிஎஸ்டி மசோத, உணவு பாதுகாப்பு மசோதா , உதயா மின் திட்டம், நீட் தேர்வு போன்றவறை எதிர்த்தார்கள். ஆனால் அவர் இறந்த பின்பு இந்த நான்கும் ஒரே நேரத்தில் கையெழுத்தானதே எப்படி என ஆக்ரோசமாக கூறியுள்ளார்.

இறந்த பின்பு திடீரென்று ஆளுநர் பன்னீர் செல்வத்தை முதல்வர் என்று கூறுகிறார், அதிலிருந்தே தெரிகிறதே யார் நடிகர், இயக்குனர் என்று மறைமுகமாக குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments