ஏ.டி.எம்-ல் பணம் எடுக்க சம்பளத்திற்கு ஆள் தேவை! பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

Report Print Arbin Arbin in இந்தியா

திருச்சியில் வணிகவளாகம் ஒன்றில் ஏ.டி.எம்-ல் பணம் எடுத்துக் கொடுக்க சம்பளத்திற்கு ஆள் தேவை என்ற போர்டு வைக்கப்பட்ட தகவல் அந்த பகுதியில் தற்போது வைரலாகி வருகிறது.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் வெளியே இருக்கும் வணிகவளாகம் ஒன்றில் அமைந்துள்ள ஒர் கவரிங் நகை கடையில் குறித்த போர்டு இருந்துள்ளது.

ஏ.டி.எம்-ல் பணம் எடுக்க ஆட்களை பணி அமர்த்தும் அளவிற்கு தற்போது நிலைமை மோசமாகிவிட்டதா என பொதுமக்களிடையே கேள்வி எழுந்தது.

இந்த நிலையில் குறித்த தகவல் தொடர்பில் விசாரணை மேற்கொண்டபோது, அந்தக் கடையை சதாத் என்பவர் நடத்தி வருகிறார், அது அவருடைய மைத்துனரின் கடை எனவும் தெரிய வந்துள்ளது.

சதாத் என்பவரிடம் இது தொடர்பில் விசாரித்தபோது, ''ஆமாங்க, நாந்தான் அந்த போர்டை மாட்டினேன்; எல்லாரும் பாத்துட்டு, ஃபோட்டோ, பேட்டினு கேக்க ஆரம்பிச்சிட்டாங்க, அதான் கழட்டி உள்ள வச்சிட்டேன்.

கடைய பாத்துக்க ஆள் கிடையாது, பணம் எடுக்கப்போன வயசானவங்க இறக்குறதா டிவியில பார்த்ததும் இந்த வயசுல வங்கி வாசல்லையோ, ஏ.டி.எம் வாசல்லையோ நிக்கறது ரிஸ்க்குன்னு தோணுச்சு.

அதான் இப்படி போர்டு வச்சேன். கொஞ்சம் பேரு வந்து கேட்டாங்க. பணம் எடுத்துத் தர 150 ரூபாய்க்கு மேல கேட்டவங்க கிட்டலாம் வேணாம்னு சொல்லிட்டேன்.

100- ரூபாய்க்கு ஒருத்தர் கேட்டாரு. சரி நம்மால் அவரு ரெண்டு வேளை சாப்பிடுவாரேனு 100க்கு ஒத்துக்கிட்டேன்.

இந்த பிரச்னை வந்தப்ப ஒண்ணும் தெரியலை, ஆனா நாளாக ஆக பணம் எடுக்கறது ரொம்ப கஷ்டமா இருக்கு. இதுலாம் எங்க போய் முடியுமோ தெரியலை'' என்றார் வேதனையுடன்.

கடந்த நவம்பர் 8-ஆம் திகதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஊடக நேரலையில் தோன்றி தற்போது வரை புழக்கத்தில் இருக்கும் 500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என அறிவித்தார்.

மேலும் புதிய 2000 ரூபாய் தாள்களை வெளியிட்டதுடன் பொதுமக்கள் வங்கியில் இருந்து தங்கள் பணத்தை எடுக்கவும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தார்.

மட்டுமின்றி அடுத்த 50 நாட்களில் குறித்த பணப்புழக்க நிலைமை சீரடையும் எனவும் நாட்டு மக்களுக்கு வாக்குறுதி அளித்தார். இந்த விவகாரம் தொடர்பில் நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் வங்கி மற்றும் ஏ.டி.எம் வாசல்களில் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments