ஜெயலலிதா விஷயத்தில் அது நடக்கவில்லை: பிரதாப் ரெட்டி உருக்கம்

Report Print Fathima Fathima in இந்தியா

மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

75 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு, பலனின்றி கடந்த டிசம்பர் 5ம் தேதி மரணம் அடைந்தார். ஜெயலலிதாவின் மரணத்தில் பல மர்மங்கள் நிலவுவதாக சொல்லப்படுகிறது.

அந்த மர்மங்களுக்கு விடை கிடைக்காத நிலையில் அப்போலோ மருத்துவமனையின் தலைவர் ஆங்கில ஏடு ஒன்றில் ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை குறித்து அவரே கட்டுரை எழுதியுள்ளார். அதன் தமிழாக்கம் இங்கே....

''மறைந்த மரியாதைக்குரிய முதல்வரின் பல நற்குணங்களை கண்டு நான் வியந்துள்ளேன். எனக்கு அவர் மீது மிகுந்த மரியாதை உண்டு. தான் நினைத்த காரியத்தை கச்சிதமாக செய்து முடிக்கும் அவரது ஆற்றலை கண்டு நான் வியந்து போயிருக்கிறேன்.

எனக்கு அவரிடம் நல்ல பரிச்சயம் உண்டு. இதற்கு முன்பும் பல முறை நான் அவரை சந்தித்திருக்கிறேன். அதில் ஒன்றை இப்போது நினைவு கூற விரும்புகிறேன். நான் அமெரிக்காவில் இருந்து திரும்பிய பின், ஹெச்.எம் மருந்துவமனையில் பணியில் இருந்தேன். ஒரு முறை உடல்நலக்குறைவாக காரணமாக என்னிடம் ஜெயலலிதா வந்தார்.

துணைக்கு அவரது தோழிகள் சிலரும் இருந்தனர். எப்போதும் அவரது முகத்தில் அந்த புன்னகை தவழும். என்னை மட்டுமல்ல சுற்றியிருக்கும் ஒவ்வொருவரையும் பார்த்தாலும் அந்த புன்னகை மலரும். காலங்கள் ஓடி முதலமைச்சர் பதவி வரை அவர் உயர்ந்தாலும் என்னை பார்த்தால் அதே முக மலர்ச்சியுடன்தான் பேசுவார்.

இந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட நாள் முதல் நான் அவரது சிகிச்சை முறைகளை தீவிரமாகவே கண்காணித்துக் கொண்டிருந்தேன். சொல்லப் போனால், இந்த இரண்டு மாதங்களும் சென்னை நகரை விட்டு நான் வெளியே எங்கேயும் செல்லவில்லை.

என்னால் முடிந்த வரை அவருக்கு அளிக்கப்படும் மருத்துவத்தை நேரில் ஆய்வு செய்து கொண்டிருந்தேன். எங்கள் சக்திக்குட்பட்டு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதனை செய்து விட வேண்டுமென்பதுதான் எனது எண்ணம். அவரை விரைவில் குணப்படுத்தி விடலாம் என்ற நம்பிக்கையும் எனக்கு இருந்தது.

ஜெயலலிதா மரணம் அடைவதற்கு முன், ஒரு முறை நான் ஹைதரபாத்துக்கு போக வேண்டியது இருந்தது. அதுவம் ஒரு நாள் பயணம்தான். புறப்படுவதற்கு முன்பு கூட அவரை சென்று சந்தித்தேன். நலமாக இருந்தார். என்னை பார்த்ததும் அதே புன்னகையுடன் எதிர்கொண்டார். அவரிடம் பேசி விட்டுதான் நான் புறப்பட்டேன்.

அந்த சமயத்தில் தொலைக்காட்சியில் அவர் சினிமா பார்த்துக் கொண்டிருந்தார். நான் அவரிடம் 'ஹைதரபாத்தில் இருந்து நான் திரும்பும் போது நீங்கள் எழுந்து நடமாடுவீர்கள்' என்று கூறினேன்.

ஹைதரபாத்தில் இருந்து திரும்பியதும் ஜெயலலிதாவை டிஸ்சார்ஜ் செய்து விடலாம் என்கிற எண்ணமும் எனக்குள் இருந்தது. வந்ததும் அது குறித்து முடிவெடுக்கலாம் என்று யோசித்தவாறு புறப்பட்டேன். நம்பிக்கையுடன்தான் ஹைதரபாத் புறப்பட்டேன். ஆனால், அங்கிருந்து திரும்பியதும் ஜெயலலிதாவுக்கு 'கார்டியாக் அரெஸ்ட்' என்றதும் நொறுங்கிப் போனேன். இத்தனைக்கும் இதயநோய் நிபுணர் ஒருவர் அவரை தீவிரமாக கண்காணித்துக் கொண்டிருந்தார்.

கார்டியாக் அரெஸ்ட் வந்தது என்னை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஏனென்றால் அவரது இதயத்தில் கார்டியாக் அரெஸ்ட் வருவதற்கான எந்த அறிகுறியும் அது வரை தென்படவில்லை.

கார்டியாக் அரெஸ்ட் என்றதும் அடுத்த நொடியே எங்கள் மருத்துவக்குழு சிகிச்சையை தொடங்கி விட்டது. இதனை மருத்துவத்துறையில் 'கோல்டன் ஹவர் 'என்று நாங்கள் குறிப்பிடுவோம். ஜெயலலிதா சிகிச்சை எடுத்த அறையில் இருந்து இரண்டு அறைகள் தாண்டிதான் 'எக்மோ ' சிகிச்சை அளிக்கப்படும் அறை இருந்தது.

கார்டியாக் அரெஸ்ட் தாக்கிய பல நோயாளிகள் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு பிழைத்து வீடு திரும்பியிருக்கிறார்கள். துரதிருஷ்டவசமாக நமது மேடம் சி.எம். விஷயத்தில் அது நடக்கவில்லை. ஜெயலலிதா ஜென்டில் வுமேன், சிகிச்சைக்கு அருமையாக ஒத்துழைத்தார். கருணைமிக்கவர், நோய் தந்த வலியை எளிதாக தாங்கிக் கொண்டவர்.

என்னை பொறுத்த வரை ஜெயலலிதா ஒரு அபூர்வமான பெண். அன்பானவர். அவரது கோபத்தில் கூட ஒரு நியாயம் இருக்கும். ஜெயலலிதாவின் கட்சித் தொண்டர்கள மட்டுல்ல தமிழக மக்கள் மட்டுமல்ல அவரது திட்டங்களால் நாடு முழுவதும் உள்ள மக்கள் பயன் அடைந்திருக்கிறார்கள். ஜெயலலிதா என்ற மாபெரும் மனுஷி மறைந்தாலும் நமது உள்ளத்தில் என்றும் வாழ்வார்.

பிரதாப் ரெட்டி

- Vikatan

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments