தமிழகத்தை இதுவரை தாக்கிய புயல்கள் இவைதான்

Report Print Arbin Arbin in இந்தியா

சென்னையை புரட்டிப் போட்ட வர்தா புயல் போன்று இதுவரை 6 முறை தமிழகத்தின் முக்கிய பகுதிகளை பல்வேறு காலகட்டங்களில் புயல் தாக்கியுள்ளது.

தமிழக தலைநகர் சென்னையை நேற்று மாலை கடந்த வர்தா புயலால் நகரமே சின்னாபின்னமாகிவிட்டது. காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் புயலின் தாக்கம் இருந்தது.

இதேபோன்று கடந்த 2005 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் உருவான ஃபானூஸ் புயல், மணிக்கு 101 கி.மீ. வேகத்தில் வேதராண்யம் அருகே கரையைக் கடந்தது.

ஃபானூஸ் புயல் காரணமாக சுமார் 25,000 பேர் வீட்டை விட்டு வெளியேறினர். தொடர்ந்து 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25-ஆம் திகதி உருவான 'நிஷா' புயல் மணிக்கு சுமார் 83 கி.மீ. வேகத்தில் கரையைக் கடந்தது.

'நிஷா' புயலால் ஆயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதோடு 189 பேர் உயிரிழந்தனர். அடுத்து 2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6 ஆம் திகதி சென்னையைத் தாக்கிய ஜல் புயலால் 70,000 பேர் இடம்பெயர்ந்தனர். மட்டுமின்றி 'ஜல்' புயல் காரணமாக 54 பேர் உயிரிழந்தனர்.

2011 ஆம் ஆண்டு டிசம்பர் இறுதி வாரத்தில் கடலூர் மற்றும் புதுச்சேரியைப் புரட்டிப்போட்டது 'தானே' புயல். 'தானே' புயலால் 46 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரங்கள் முற்றாக அழிந்தன.

தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு அக்டோபரில் உருவான 'நீலம்' புயல் மணிக்கு சுமார் 83 கி.மீ. வேகத்தில் மகாபலிபுரத்தில் கரையைக் கடந்தது. 'நீலம்' புயலால் 1,50,000 பேர் தங்களது வசிப்பிடங்களை விட்டு வெளியேறினர்.

2013 ஆம் ஆண்டு டிசம்பர் 8-ஆம் திகதி உருவான 'மடி' புயல், மணிக்கு சுமார் 120 கி.மீ. வேகத்தில் வேதாரண்யம் வழியாக கரையைக் கடந்தது.

'மடி' புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலர் வெளியேற்றப்பட்டனர். இதனால், அவர்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

தற்போது சென்னையை புரட்டிப்போட்ட வர்தா புயலால் நகரம் முழுவதுமாக சின்னாபின்னமாகியுள்ளது. மட்டுமின்றி 18 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் 27 பெண்கள் உள்பட 172 பேர் காயமடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments