ஜெயலலிதாவிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கிய குணங்கள்!

Report Print Fathima Fathima in இந்தியா

ஜெயலலிதாவின் மரணத்தை தமிழகம் எதிர்கொள்ள முடியாமல் தவித்து வருகிறது. அரசியல் அபிமானம் என்பதையெல்லாம் தாண்டி ஒரு மனிதராக, தலைவியாக எல்லோருக்கும் பிடித்தமான ஒருவராக அவர் வாழ்ந்திருந்தார் என்பதையே இது காட்டுகிறது. பலருக்கும், பல விஷயங்களுக்கும் உதாரணமாக வாழ்ந்து சென்ற ஒருவரிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளம் உண்டு. அவற்றில் சில...

உறுதி

ஜெயலலிதா மறைந்தவுடன் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் எழுதப்பட்ட வார்த்தை ‘இரும்பு பெண்மணி’. தனது முடிவுகளில், ஜெயலலிதா போல உறுதியாக நின்ற வேறு தலைவரை நம்மால் நினைவு கூற முடியாது. அரசியல் பிரவேசங்களுக்கு முன்பே இதுதான் அவரின் குணம். பலம். சில சமயங்களில் இந்த உறுதியே அவருக்கு எதிர்மறையாக போயிருக்கிறது. ஆனால், அதை பலமாக மட்டுமே கூடுமானவரையில் இருக்குமாறு பார்த்துக் கொண்டார் ஜெயலலிதா.

தைரியம்

உறுதியான முடிவுகள் எடுக்க தேவை தைரியம். ஜெயலலிதாவிடம் இருந்த தைரியம் மிகப்பெரியது. எந்தச் சூழலை கண்டும், எந்த மனிதரைக் கண்டும், எந்தப் பிரச்னையைக் கண்டும் ஜெயலலிதா பயந்ததில்லை. அந்த தைரியம் தான் அவரை கோடிக்கணக்கான மக்கள் மனதுக்கு கொண்டு சென்றது.

கட்சிக்குள்ளேயும், கட்சிக்கு வெளியேயும் அவருக்கு நிகழ்ந்த பல கொடுமைகளை தைரியத்துடன் எதிர்கொண்டதாலே அவரால் இத்தனை ஆண்டும் இந்த நாட்டை ஆள முடிந்தது

நம்பிக்கை

தன் மேல் மட்டுமல்ல, மற்றவர்கள் மேலும் ஜெயலலிதாவுக்கு நம்பிக்கை அதிகம். அவரை போல புதுமுகங்களுக்கு அரசியலில் வாய்ப்பு தந்த இன்னொரு தலைவர் கிடையாது. ஒரே தேர்தலில் ஒரு சாதாரண தொண்டன் அமைச்சர் ஆக முடிந்ததெல்லாம் ஜெயலலிதா காலத்தில் தான்.

இதை அரசியல் விமர்சகர்கள் பலர் குறையாக பார்த்தாலும், ஜெயலலிதா பாஸிட்டீவாகத்தான் நினைத்தார். அதன் பலன்களை அவர் கண்கூடாக பார்த்ததாலே தொடர்ந்து புதுமுகங்களுக்கு அதிக வாய்ப்புகளை அளித்தார். அதிகாரம் பகிர்ந்து பலருக்கும் கிடைக்க இது முக்கியமான ஒரு வாய்ப்பாக இருந்தது என்பதை மறுக்க முடியாது.

யாரையும் சார்ந்து இருந்ததில்லை

பிறர் மேல் அதிக நம்பிக்கை வைத்தவர் என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவு உண்மைதான் அவர் யாரையும் நம்பி இருந்ததில்லை என்பதும். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேட்ட குதர்க்கக் கேள்விகளுக்கு கூட துறை அமைச்சர்கள் பதில் அளிக்க இயலாமல் நிற்கும்போது அவரே பதில் அளித்ததுண்டு. எல்லா கன்ட்ரோலையும் தன்னிடத்தில் வைத்துக்கொண்டவர், அதை திறம்படவும் செய்தார் என்பதுதான் ஆச்சர்யம்.

மொழி ஆளுமை

எந்த ஒருவரின் வெற்றிக்கும் அவர்களது கம்யூனிகேஷன் மிக முக்கிய பங்கு வகிக்கும். அதற்கு மொழியில் ஆளுமை முக்கியம். ஜெயலலிதாவுக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் என ஐந்து மொழிகள் நன்றாக தெரியும். அவரது ஆங்கில உச்சரிப்பும், வார்த்தை தேர்வுகளும் பிரபலம். சொல்ல வருவதை தெளிவாகவும், சுருக்கமாகவும், இன்முகத்தோடும் சொல்வதில் ஜெயலலிதாவுக்கு நிகர் அவரேதான்.

தலைமைப் பண்பு

ஜெயலலிதா என்ற வார்த்தைக்கு அர்த்தமாக இதை சொல்லலாம். கோடிக்கணக்காக தொண்டர்கள் கொண்ட ஒரு கட்சியை, தன் ஒற்றை சொல்லுக்கு கீழ் கொண்டு வருவதெல்லாம் இமாலய சாதனை. மூத்த அரசியல்வாதிகள், அபார திறமைசாலிகள், வழிவழியாக அரசியலில் இருந்தவர்கள் என பலரையும் சமாளித்துதான் நிரந்தரப் பொதுச்செயலாளர் என்ற இடத்துக்கு வந்தார்.

அதுபோலவே, எம்.ஜி.ஆருக்கு அடுத்து தொடர்ந்து இரண்டு முறை முதல்வராக தேர்வானவர் ஜெயலலிதா மட்டுமே. இவை அனைத்துக்கும் காரணம் அவரின் தலைமைப்பண்புதான். மக்களும் அதை நம்பியே அவருக்கு வாக்களித்தார்கள்.

கடின உழைப்பு

ஒரு மாநிலத்தை ஆள்வது என்பது சாதாரண விஷயமில்லை. அதிகாரிகள், வசதிகள் என அனைத்தும் இருந்தாலும் தினம் தினம் பல மணி நேரங்கள் உழைக்க வேண்டிய ஒரு செளகர்ய சிரமம் அது. தனது வாழ்க்கையில் ஜெயலலிதா இத்தனை சிரமப்பட்டிருக்க வேண்டியதில்லை என ஒரு முறை சொல்லியிருக்கிறார்.

“அம்மா சம்பாதித்ததை எல்லாம் சேர்த்துவைத்திருந்தால், நான் சினிமாவுக்கே வந்திருக்க வேண்டாம். என்னை நல்லா படிக்கவைச்சு, சாதாரணமான குடும்பத்துப் பெண் மாதிரி 18, 19 வயசிலே நல்ல இடத்திலே கல்யாணம் பண்ணிக் கொடுத்திருந்தால், நான் நாலு குழந்தைகளுக்குத் தாயாகி இருப்பேன்... ஹேப்பியாக. இத்தனை அப்ஸ் அண்ட் டவுன்ஸ் என் லைஃப்பிலே இருந்திருக்காது."

என சொல்லியிருக்கிறார் ஜெயலலிதா. எவ்வளவு சிரமங்கள் வந்தபோதும், தனது உழைப்பால் அதையெல்லாம் வெற்றிப்படிக்கட்டுகள் ஆக்கியவர் என்பது உண்மை.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments