ஜெயா அஞ்சாமையும் அயராமையும் கொண்ட பேராற்றல் மிக்க தலைவர்

Report Print Amirah in இந்தியா

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில், தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அம்மையார் அவர்களுக்கு கடந்த இரண்டரை மாத காலமாகத் தீவிர சிகிச்சையளித்தும் அவரைக் காப்பாற்ற இயலவில்லை என்பது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.

அவருடைய மறைவு தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது.

ஆணாதிக்கம் மேலோங்கியுள்ள இந்த சமூகக் கட்டமைப்பில் எண்ணற்ற சவால்களையும் ஏராளமான நெருக்கடிகளையும் துணிச்சலாய் எதிர்கொண்டு, பகைவென்று சாதனைகளைப் படைத்த ஒரு மகத்தான தலைவராக அரசியலில் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட பெருமைக்குரியவர் செல்வி ஜெயலலிதா அவர்கள்.

சாதி, மதம், மொழி, இனம் போன்ற வளையங்களை மீறி அனைத்துத் தரப்பு மக்களையும் ஈர்க்கிற பேராற்றலைக் கொண்டவராக விளங்கியவர்.

சமூகத்தில், அரசியலில், பொருளியலில் எவ்வளவு வலிமை மிக்கவர்களாக இருந்தாலும், அவர்களை எதிர்க்கவேண்டிய சூழல் வருமெனில், சிறிதும் அஞ்சாமல், சமரசமில்லாமல், துணிச்சலாய் மோதக்கூடிய வல்லமைமிக்கவராகத் திகழ்ந்தவர்.

தனது கட்சியையும் கட்சித் தொண்டர்களையும் தமிழக மக்களையுமே தனது குடும்பமாகக் கருதி தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்.

அஞ்சாமை. அயராமை என்னும் ஆளுமை தான் அவருடைய மகத்தான வெற்றிக்கு அடிப்படையாகும். அவருடைய இழப்பு எவ்வகையிலும் எவராலும் ஈடுசெய்ய இயலாததாகும்.

அவரது இழப்பால் வாடும் யாவருக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments