முதல்வர் ஜெயலலிதா, உடல்நலம் தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக அப்போலோ மருத்துவமனை தொடர்ச்சியாக அறிக்கை வெளியிட்டு வருகின்றது
இந்த தகவல் வெளியானதைத் தொடர்ந்து அ.தி.மு.க தொண்டர்கள் கவலையுடன் அப்போலோ மருத்துவமனை வாசல் முன்பு காத்திருக்கின்றனர்.
இதற்கிடையில் வீட்டுக்குத் தேவை அன்றாட பொருட்களான பால், காய்கறிகளை வாங்க மக்கள் கூட்டம் போராடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நேற்று முதல் காய்கறி விநியோகம் சீரான நிலையில் இல்லை.
இதனை ஆதாரம் காட்டி காய்கறி, பால் போன்ற பொருட்களின் விலை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சமீப காலமாக தக்காளி விலை சரிந்து வருகிறது. நேற்று வரை ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
ஆனால் இன்று பகல் திடீரென தக்காளி விலை ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்பட்டமையானது பொது மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
இதுகுறித்து வியாபாரிகள் கருத்து வெளியிடுகையில் "அத்தியாவசிய பொருட்களின் வரவு போதுமானதாக இல்லை என்பதால் அதன் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் கடைகளை மூடச் சொல்லி வாய்மொழியாகவும் கட்சியினரும் பொலிஸாரும் கூறியுள்ளனர். ஆகவேதான் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.