இடைக்கால முதல்வர் இவரா? அறிவிப்பு எந்நேரமும் வெளியாகலாம்!

Report Print Arbin Arbin in இந்தியா

முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், ஒரு இடைக்கால முதல்வர் அல்லது பொறுப்பு முதல்வர் குறித்த அறிவிப்பு எந்நேரமும் வெளியாகலாம் என்ற தகவல் பரவிவருகிறது.

கடந்த 74 நாட்களாக தொடர் சிகிச்சைப் பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

இதைத் தொடர்ந்து மாநிலம் முழுக்க பரபரப்பும் இறுக்கமான சூழலும் நிலவுகிறது. ஜெயலலிதா நலம் பெற்று வரவேண்டும் என்ற பிரார்த்தனைகள் நாடு முழுவதும் தொடர்கின்றன. இந்த சூழலில் தமிழக ஆட்சி நிர்வாகத்தில் ஏற்பட்ட நெருக்கடியைத் தீர்க்க, உடனடியாக பொறுப்பு அல்லது இடைக்கால முதல்வரை அறிவிக்க ஆளுநர் வித்யாசகர் ராவுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது.

இதைத் தொடர்ந்து இன்று அதிகாலையிலிருந்து ஓ பன்னீர் செல்வம் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் ஆகியோருடன் ஆளுநர் பேசியதாக தெரிகிறது. முதல்வரை அருகிலிருந்து கவனித்து வரும் சசிகலாவுடன் ஓபிஎஸ் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் தொடர்ந்து ஆலோசனை செய்து வருகின்றனர்.

இன்று காலை 9 மணிக்குத் தொடங்கி மூன்று முறை சசிகலா தங்கியுள்ள அறையில் இந்த ஆலோசனை நடந்துள்ளது. இன்று பிற்பகல் நடந்த அதிமுகவின் அனைத்து எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.

அனைவரும் ஒற்றுமையுடன் இருப்போம். கட்சித் தாவல் போன்றவற்றில் ஈடுபடக் கூடாது என்பது உள்ளிட்ட விடயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன. மாலையில் மீண்டும் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்துள்ளது.

இந்த கூட்டத்தில் மூத்த அமைச்சர்களான பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கலந்துகொள்ளவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும் தற்போது நிலவிவரும் சூழலை கருத்தில் கொண்டு இடைக்கால முதல்வர் குறித்த அறிவிப்பு எந்நேரமும் வெளியாகலாம் என்ற தகவல் பரவி வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments