மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு தலைக்காதலை கண்டித்த பெண்ணின் தந்தையை கொலை செய்த வாலிபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் அடுத்த பொய்நாட் பகுதியைச் சேர்ந்தவர் அவிஷேக்(25). பொறியியல் பட்டதாரியான இவர் லிபியா நாட்டில் பொறியாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில், அவிஷேக் அதேபகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை நீண்ட நாட்களாக ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.
இவர் தனது காதலை அப்பெண்ணிடம் கூற பெண்ணோ இவரின் காதலை மறுத்துள்ளார்.
இந்நிலையில், லிபியா நாட்டிலிருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த இவர் அப்பெண்ணை சந்தித்து பேசியுள்ளார்.
ஆனால், அப்பெண் இவரின் காதலுக்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்ததுடன் அவிஷேக் தொல்லை கொடுப்பதாக தனது தந்தை சதாசிவ்-ம் கூறியுள்ளார்.
இதையடுத்து, சதாசிவ்(52) அவிஷேக்கை அழைத்து கண்டித்துள்ளதாக தெரிகிறது.
இதனால், மிகுந்த ஆத்திரமடைந்த அவிஷேக், சதாசிவ்வை சரமாரியாக அடித்துள்ளார். இதில், பலத்த காயமடைந்த சதாசிவ் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆனால் சிகிச்சை பலனில்லாமல் சதாசிவ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து அவிஷேக் மீது வழக்கு பதிவு செய்த பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.