121 பேரின் உயிரை பறித்த விபத்து! அதிகாரிகளின் அலட்சியமே காரணம்- உண்மைகள் வெளியானது

Report Print Aravinth in இந்தியா
179Shares

உத்திரபிரதேச மாநிலத்தில் நேற்று அதிகாலை நடந்த ரயில் விபத்தில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 121 ஆக உயர்ந்துள்ளது.

உத்திர பிரதேச மாநிலத்தில் கான்பூர் அடுத்து 100 கி.மீ தொலைவில் புக்ராயன் என்ற பகுதியில் நேற்று அதிகாலை பாட்னா - இந்தூர் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துகுள்ளானது.

மறுசீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், பலி எண்ணிக்கை 121ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் ரயில் பெட்டியின் சக்கரங்களில் வினோத சப்தம் எழுந்ததாகவும், அதுகுறித்து புகார் தெரிவித்தும் அதனை ரயில்வே அதிகாரி அலட்சியம் செய்ததாகவும் பயணி ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, இந்த ரயிலில் பயணித்த பயணி பிரகாஷ் சர்மா (35) என்பவர் கூறியதாவது:

இந்தூர் ரயில் நிலையத்தில் சனிக்கிழமை மதியம் 2 மணிக்குப் புறப்பட்ட இந்தூர்-பாட்னா ரயிலின் "எஸ்2' பெட்டியில் நான் ஏறினேன்.

அப்போது அந்தப் பெட்டியின் சக்கரங்களில் இருந்து வினோதமான சப்தம் எழுந்ததை கவனித்தேன்.

சுமார் ஒரு மணி நேரம் கழித்து உஜ்ஜைன் ரயில் நிலையத்தில் இறங்கிய நான், இதுகுறித்து அங்கிருந்த ரயில்வேத் துறை அதிகாரி ஒருவரிடம் புகார் தெரிவித்தேன். எனினும், அவர் அந்தப் புகாரை அலட்சியப்படுத்தினார் எனத் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, விபத்துக் குறித்து விசாரணை மேற்கொள்ள ரயில்வேத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு உத்தவிட்டுள்ளார்.

விசாரணையில், ரயில்வே அதிகாரிகளின் அலட்சியப் போக்கே விபத்துக்கு காரணம் என தெரியவந்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

மேலும், இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு குடியரசுத்தலைவர், பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

நாட்டின் மிகவும் கோரமான விபத்துகளில் ஒன்றான இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.3.5 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50,000-மும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.25,000-மும் நிவாரண நிதி வழங்கப்படும் என ரயில்வேத்துறை அறிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து, பல அரசியல் கட்சி தலைவர்களும் நிவாரண அளிப்பதாக அறிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி

உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50,000-மும் நிவாரண நிதியாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

மத்தியப்பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகன்

உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50,000-மும் நிவாரண நிதியாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ்

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும். படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் நிவாரண உதவியாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments