வந்துட்டேன்னு சொல்லு....திரும்பி வந்துட்டேன்னு சொல்லு: ஓபிஎஸ்

Report Print Deepthi Deepthi in இந்தியா

தன்னடக்கம், பணிவு, மரியாதை இதையெல்லாம் தாண்டி அதிமுகவின் உண்மை விசுவாசி என பல பெயர்களுக்கு சொந்தக்காரரான ஒபிஎஸ் அவர்கள் தமிழக முதல்வர் ஜெயலலிதா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் அவரின் முக்கிய பொறுப்புகளை கவனிக்குமாறு நியமிக்கப்பட்டிருக்கிறார்.

ஒபிஎஸ்க்கு மீண்டும் மீண்டும் பொறுப்புகள் தேடி வருவதற்கு காரணம் என்னவெனில், அதிமுகவில் என்னதான் பிரச்சனைகள் நடந்தாலும், அதனை வெளிக்காட்டிக்கொள்ளாமல் சாந்த சொரூபியாய் நடப்பார், உட்காருவார், ஏன் பேசக்கூட செய்வார்.

அந்த அளவுக்கு மிகவும் நல்ல மனிதர் என்பதையும் தாண்டி அதிமுகவின் ஒரே நம்பிக்கை நட்சத்திரம் என்ற பெயரை சம்பாதித்து வைத்திருக்கிறார்.

அம்மா ஆட்சியில் இருக்கும்போது அவர் புகழ் பாடப்படுவதை விட, அவர் இல்லாதபோது தான் அநியாத்துக்கு அவர் புகழ்பாடப்படும். தமிழகத்தின் எந்த மூலைமுடுக்கையும் விட்டு வைக்கமாட்டார்கள்.

அம்மா அது செய்தார், அம்மா இது செய்தார் என பட்டிதொட்டியெல்லாம் பட்டையை கிளப்பும் அதிமுக தொண்டர்கள் ஒருபுறம் என்றால், அதிமுக அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் சட்டமன்றத்தில், அம்மா இல்லாத காரணத்தால் அவரின் புகைப்படத்தை சட்டை பையிலும், டேபிளிலும் வைத்துக்கொண்டு புகழ் பாடுவார்கள்.

இதற்கெல்லாம் அச்சாரம் இட்டுவைப்பவர் ஓபிஎஸ்தான். இவரிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டால் அதிகாரத்தை பயன்படுத்துவதை விட அனுதாபத்தை தான் மக்கள் மத்தியில் சம்பாதிப்பார்.

அதுவும் இவரிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்ட பின்னர், இவர் எப்போது அறிக்கை வெளியிடுவார், அதற்கு எப்போது நாம் பதில் அறிக்கை வெளியிடலாம் என பல அரசியல் தலைவர்கள் காத்திருப்பார்கள்.

இதில், திமுக தலைவர் கருணாநிதி மிக முக்கியமானவர். எதிர்கட்சியினரின் செயல்பாடுகள் குறித்து அறிக்கை வெளியிடுவதில் படு உற்சாகமாய் இருப்பார்.

அதுவும் சட்டப்பேரவையில் ஓபிஎஸ் உட்காரும் விதமே ஒரு தனி ஸ்டைல்தான். அந்த அளவுக்கு மிகவும் பணிவாக நாற்காலியின் நுனியில் போய் அமர்ந்துகொள்வார் மனிதர். இதற்கெல்லாம் அடக்கம், ஒடுக்கம் என்று பெயர்.

தற்போது, இவரிடம் முக்கிய இலாகாக்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதால், தமிழக அமைச்சரவை எவ்வாறு செயல்படும் என்பதை பொறுத்திருந்ததுதான் பார்க்க வேண்டும்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments