ஜெயலலிதா செய்திதாள்களை படிக்கிறார்: அதிமுக அதிகாரப்பூர்வ தகவல்

Report Print Peterson Peterson in இந்தியா

அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதா தற்போது செய்திதாள்களை படிப்பதாகவும், வேகமாக குணமாகி வருவதாகவும் அதிமுக அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.

முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரை நேரடியாக சந்திக்க இயலாத காரணத்தினால் முதல்வர் குறித்து பல்வேறு வதந்திகள் வெளியாகி வருகின்றன.

முதல்வர் முழுமையாக குணமாகும் வரையில் ஒரு பொறுப்பு முதல்வரை ஆளுநர் நியமிக்க வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்துள்ளன.

இதனை தொடர்ந்து, நேற்று முன் தினம் முதல்வர் ஜெயலலிதா வகித்து வந்த 8 துறைகளையும் நிதி அமைச்சரான ஓ.பன்னீர் செல்வத்திற்கு மாற்றி ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டார்.

ஆனால், இந்த நடவடிக்கை எதிர்க்கட்சிகள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

குறிப்பாக, செயற்கை சுவாசத்தில் உள்ள ஜெயலலிதா ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு எவ்வாறு ஒப்புதல் அளித்தார்? துறைகளை மாற்றிய அந்த கோப்பில் முதல்வர் கையெழுத்திட்டாரா?

முதல்வரை ஒரு அரசியல் தலைவர் கூட நேரடியாக சந்திக்க முடியாத நிலையில், இதுவரை முதல்வரின் உடல்நிலை குறித்து அதிமுக ஏன் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடவில்லை? என திமுக தலைவர் கருணாநிதி நேற்று கேள்விகளை எழுப்பியுள்ளார்.

கருணாநிதியின் கேள்விகளுக்கு நேற்று மாலை அதிமுக கட்சியின் செய்தி தொடர்பாளரான சி.ஆர் சரஸ்வதி அதிகாரப்பூர்வ தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘முதல்வர் தற்போது செய்திதாள்களை படிக்கும் அளவிற்கு குணமாகி விட்டார். துறைகளை மாற்றுவது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவிற்கு தகவல் அனுப்பப்பட்டது.

இந்த தகவலை கேட்ட முதல்வர் ‘ஆமாம்’ என பதிலளித்தார். முதல்வர் சுயநினைவுடன் தான் உள்ளார்.

மருத்துவர்களை தவிர வேறு யாரும் முதல்வர் இருக்கும் அறைக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மேலும், முதல்வர் ஜெயலலிதாவின் ஒப்புதல் இல்லாமல் எந்த நடவடிக்கையும் கட்சியில் செயல்படுத்தவில்லை என சி.ஆர் சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments