பெண்களின் நெற்றியில் பிக்பாக்கெட் என்று பச்சை குத்திய பொலிஸார்!

Report Print Arbin Arbin in இந்தியா

பஞ்சாப் மாநிலத்தில் ஜேப்படி தொழிலில் ஈடுபட்ட பெண்களின் நெற்றியில் "பிக்பாக்கெட்" என்று பச்சை குத்திய பொலிஸ் அதிகாரிக்கு மூன்றாண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பஞ்சாப் மாநில தலைநகரான அமிர்தசரஸ் நகரில் கடந்த 1993-ம் ஆண்டு ஜேப்படி தொழிலில் ஈடுபட்டதாக நான்கு பெண்களை கைதுசெய்த பொலிஸார், அவர்களின் நெற்றியில் அனைவருக்கும் தெரியும்வகையில் ‘பிக் பாக்கெட்’ என்று பச்சை குத்தி கொடூரப்படுத்தியுள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அந்தப் பெண்கள் நீதிபதி முன்னிலையில் தங்களது முகத்தில் போர்த்தியிருந்த முக்காடுகளை நீக்கி இந்த கொடூரத்தை அம்பலப்படுத்தியபோது, நாட்டில் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் பலரும் கொதிப்படைந்தனர்.

அமிர்தசரஸ் நகரில் உள்ள சீக்கிய பொற்கோயிலில் தரிசனம் செய்துவிட்டு, சொந்த ஊருக்கு செல்ல பஸ் நிலையத்தில் காத்திருந்த தங்களை பொலிஸார் பலவந்தமாக பிடித்துச்சென்று, ஒருவாரமாக லாக்கப்பில் அடைத்துவைத்து, இந்த அட்டூழியத்தில் ஈடுபட்டதாக அவர்கள் நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்தனர்.

தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கேட்டு பாதிக்கப்பட்ட பெண்கள் பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதையடுத்து, பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் கடந்த 23 ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வந்தது.

இவ்வழக்கில் தீர்ப்பளித்த சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி பல்ஜிந்தர் சிங், மேற்படி சம்பவத்தின்போது அமிர்தசரஸ் நகர பொலிஸ் அதிகாரியாக பதவிவகித்த சுக்தேவ் சிங் சின்னா, ராம்பாக் நகர காவல் நிலைய முன்னாள் துணை ஆய்வாளர் நரிந்தர் சிங் மல்லி, மற்றும் உதவி ஆய்வாளர் கன்வால்ஜித் சிங் ஆகியோரை குற்றவாளிகள் என்று உறுதிப்படுத்தினார்.

இதனையடுத்து சுக்தேவ் சிங் சின்னா, நரிந்தர் சிங் மல்லி ஆகியோருக்கு மூன்றாண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், கன்வால்ஜித் சிங் ஓராண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments