காதலியை தங்கை என்று அழைக்க வற்புறுத்தல்: காதலன் எடுத்த அதிரடி முடிவு

Report Print Arbin Arbin in இந்தியா

டெல்லியில் காதலியை தங்கை என்று ஏற்றுக்கொள்ள பெண்ணின் பெற்றோர் வற்புறுத்தியதால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியின் நிகார் விஹார் பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியில் குடியிருந்து வரும் யாக்யா தத் என்பவர் அப்பகுதியில் உள்ள இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். குறிப்பிட்ட காதலர்கள் சம்பவத்தன்று அருகாமையில் உள்ள உணவு விடுதி ஒன்றில் உணவருந்த சென்றுள்ளனர்.

அப்போது அங்கிருந்த பெண்ணின் உறவினர் சிலர் இவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே தகவலறிந்து வந்த பெண்ணின் உறவினர்கள் காதலர்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு பொலிஸ் நிலையம் சென்றுள்ளனர். அங்கு இளைஞரின் உறவினர்களையும் அழைத்துள்ளனர்.

இந்நிலையில் பெண்ணின் தந்தை அந்த இளைஞனை கோபத்தில் திட்டியுள்ளார். தமது மகளை விட்டு விலகி விடுமாறும் கோரிக்கை வைத்தார்.

மட்டுமின்றி அந்த இளம்பெண்ணின் காலைத் தொட்டு வணங்கி அவரை தங்கையாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார். பொலிசார் முன்னிலையில் அந்த இளைஞரும் அவ்வாறே செய்துள்ளார்.

இச்சம்பவத்தால் மனமுடைந்த அந்த இளைஞர் வீட்டுக்கு திரும்பியதும் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிந்துள்ள பொலிசார், குறிப்பிட்ட சம்பவத்தில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றும், மன உளைச்சல் காரணமாகவே அந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments