சினிமாவை மிஞ்சிய நிஜம்: அதிர்ச்சியூட்டும் தகவல்கள்

Report Print Raju Raju in இந்தியா

கொள்ளையர்களுடன் தொடர்பு வைத்து கொண்டு அவர்கள் கொள்ளை அடித்த பணத்தில் கமிஷனும் வாங்கி கொண்ட பொலிஸ் அதிகாரிகளின் செயல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் அன்வர் சதாத், நகை வியாபாரியான இவரிடம் வேலை பார்க்கும் இருவர் வேலை விடயமாக சென்னை சென்று விட்டு ஊருக்கு காரில் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் கையில் 3.90 கோடி பணமும் இருந்தது.

இந்நிலையில் காரை ஒரு கும்பல் வழிமறித்தது. பொலிஸ் சீருடையில் இருந்த அவர்கள் அந்த இருவரையும் மிரட்டி பணத்தை பறித்து கொண்டு காரையும் எடுத்து கொண்டு மின்னல் வேகத்தில் மறைந்தனர்.

பின்னர் இதுபற்றி பொலிசில் புகார் செய்யப்பட சபீக் (28) சுதிர் (33) சுபாஷ் (43) ஆகியோரை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் கரூர் பரமத்தி பொலிஸ் ஆய்வாளர் முத்துகுமார், உதவி ஆய்வாளர் சரவணன், தலைமை காவலர் தர்மேந்திரன் ஆகியோருக்கு இதில் சம்மந்தம் இருப்பதாகவும் அவர்களுக்கு 3.90 கோடியில் 2 கோடி பணம் பங்காக சென்றிருப்பதும் தெரிய வந்துள்ளது.

பின்னர் அந்த மூவரும் பணி நீக்கம் செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் தற்போது உள்ளனர்.

இதுகுறித்து உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த கொள்ளை கூட்டத்துக்கு ஸ்ரீதரன் (60) என்பவன் தான் தலைவன். தென் மாநிலங்களில் உள்ள நகை வியாபாரிகளின் பண பரிவர்த்தனையை நோட்டமிடவே தனியாக ஆட்களை அவன் வைத்துள்ளான்.

அவன் தான் இந்த கார் கடத்தலை அரங்கேற்றியுள்ளான். அவனுக்கு அந்த கரூர் பொலிசார் பணத்துக்காக உதவி செய்துள்ளனர்.

இந்நிலையில் கரூரை சேர்ந்த மேலும் இரண்டு காவலர்களான அர்ஜூனன், பழனிவேலு ஆகியோருக்கும் இதில் சம்மந்தம் இருப்பது தெரியவந்ததை அடுத்து அவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments