ராம்குமார் மரண வழக்கில் அதிரடி தீர்ப்பு..!

Report Print Basu in இந்தியா

ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்வது தொடர்பான வழக்கின் விசாரணையில் தற்போது அதிரடி தீர்ப்பு வெளியாகியுள்ளது.

சுவாதி வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் மரணம் அடைந்த ராம்குமாரின் உடல் தற்போது பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதால், பிரேத பரிசோதனை செய்யப்படும் போது, அரசு மருத்துவர்களோடு, தங்கள் சார்பில் ஒரு தனியார் மருத்துவர் மற்றும் ஒரு வழக்கறிஞரை அனுமதிக்க வேண்டும் என்று ராம்குமாரின் தந்தை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இரு நாட்களுக்கு முன்பு அந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, தனியார் மருத்துவரை அனுமதிப்பது குறித்து இரு நீதிபதிகளிடையே கருத்து வேறுபாடு எழுந்ததால், இந்த வழக்கை மூன்றாவது நீதிபதி விசாரிப்பார் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

அதன்படி, அந்த வழக்கு விசாரணை இன்று காலை நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கிருபாகரன், தீர்ப்பை மாலை 5 மணிக்கு ஒத்தி வைத்தார்.

தற்போது தீர்ப்பளித்த நீதிபதி, ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்யும் குழுவில், தனியார் மருத்துவர் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தார்.

அதற்கு பதிலாக, எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர் ஒருவரை சேர்க்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளார். இந்த மருத்துவமனை மத்திய அரசின் கீழ் செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் 27ம் தேதிக்குள் மருத்துவரை முடிவு செய்து, பிரேதபரிசோதனையை முடிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments