துணிகர திருட்டு சம்பவம்: திருடன் கன்னத்தை கடித்து துப்பிய பெண்

Report Print Aravinth in இந்தியா

நெல்லை மாவட்டத்தில் ஆசிரியையிடம் செயினை பறிக்க முயன்ற திருடனின் கன்னத்தை கடித்து துப்பி தப்பிய சம்பவம் நடந்துள்ளது.

நெல்லை மாவட்டம் கூடங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோசபின் இமாகுலேட்(52). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், மதிய உணவு உண்பதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார். அப்பொழுது இவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்ததை அறிந்த திருடன் ஒருவன், வீட்டிற்குள் புகுந்து கத்தியை காட்டி இமாகுலேட் கழுத்தில் இருந்த செயினை பறிக்க முயன்றுள்ளான்.

ஆனால் இமாகுலேட் சிறிதும் பயமில்லாமல் கத்தியை தட்டிவிட்டு திருடனின் கன்னத்தை பலமாக கடித்து துப்பியுள்ளார்.

இந்நிலையில் கன்னத்தில் ரத்தம் சொட்ட சொட்ட அலறிய திருடன் இமாகுலேட்டின் காதை அறுக்க முயன்றுள்ளான்.

இதற்கிடையில் இமாகுலேட்டின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்துள்ளனர். இதை பார்த்த திருடன் யார் பிடியிலும் சிக்காமல் தப்பி ஓடிவிட்டான்.

இதைஅறிந்த அப்பகுதி பொலிசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து இமாகுலேட்டை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், திருடன் கைப்பேசியை இமாகுலேட்டின் வீட்டிலேயே தவற விட்டு சென்றதால் திருடனை பிடிப்பது மிகவும் சுலபம் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments