தமிழகத்தினை கடந்த 2 ஆண்டுகளாக உலுக்கிய இறப்புகள் கோகுல்ராஜ் கொலை, சுவாதி கொலை, டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை மற்றும் ராம்குமாரின் தற்கொலை தான்.
இந்த நான்கு பேரின் இறப்பு தொடர்பான எவ்வித வழக்குகளும், விசாரணைகளும் முடியப்படாத நிலையில், தற்போது வரை குற்றவாளிகள் அனைவரும் சந்தேக பார்வையில் மட்டுமே வைக்கப்பட்டுள்ளனரே தவிர, இன்று வரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.
இதில் சமீபத்தில் நடந்த சுவாதி கொலை சம்பவம் தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்த நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமாரின் தற்கொலை செய்தி தான் தற்போது ஊடகங்களில் தலைப்பு செய்திகளாக வெளியாகி வருகின்றன.
ராம்குமார் மரணம் கொலையா? தற்கொலையா? என்ற தலைப்பில் ஒவ்வொரு ஊடகங்களும் தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்ற நிலையில், மேலே கூறப்பட்ட நான்கு பேரின் இறப்புகளின் திகதிகளிலும் தொடர்புகள் இருக்கின்றன என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்று.
உயர்ஜாதி பெண்ணை காதலித்த குற்றத்திற்காக சேலம் மாவட்டத்தை சேர்ந்த பொறியியல் மாணவர் கோகுல்ராஜ், கடந்த 24.06.2015 ஆம் ஆண்டில் கொலை செய்யப்பட்டார்.
அதேபோன்று ஒருதலைக்காதல் காரணமாக சுவாதி என்ற ஐடி ஊழியர் 24.06.2016 ஆம் ஆண்டு நுங்கம்பாக்கம் ரயில்வே நிலையத்தில் வைத்து கொலை செய்யப்பட்டார்.
இவர்கள் இருவரின் கொலை நடந்தது வெவ்வேறு வருடம் என்றாலும், ஒரே மாதம் ஒரே திகதி ஆகும்.
அதேபோன்று, தற்கொலை என்று எடுத்துக்கொண்டால் டிஎஸ்பி விஷ்ணுபிரியா 18.09.2015 ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். ராம்குமாரும் 18.09.2016 ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த இரண்டு தற்கொலை சம்பவமும் ஒரே திகதியில் நடந்துள்ளன.
சம்பவங்கள் வேறு வேறு என்றாலும் மரணங்களின் திகதிகள் ஒன்றோடு ஒன்று தொடர்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்த திகதிகளை ஒப்பிட்டு பார்த்து ஒரு உபயோகமும் இல்லை, எதற்காக இந்த கொலை மற்றும் தற்கொலை நடந்தது? அதன் பின்னணி மற்றும் குற்றவாளிகள் யார்? என கண்டுபிடிக்க வேண்டியது தான் முக்கியமானது.