ராம்குமார் மரணம்: அரசியல் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?

Report Print Deepthi Deepthi in இந்தியா

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் தற்கொலை செய்து கொண்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், உரிய விசாரணை நடத்த வேண்டுமென அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மு.க.ஸ்டாலின்

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், மின் வயரைக் கடித்து ராம்குமார் தற்கொலை செய்து கொண்டார் எனப் புழல் சிறை நிர்வாகம் தெரிவித்திருப்பது ஏற்கக் கூடியதாகவும், நம்பும்படியாகவும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

ராம்குமார் தற்கொலை அதிர்ச்சியையும், மிகுந்த வேதனையையும் தருவதாகக் குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், சிறையில் ராம்குமாரின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியவில்லை என்பது பல சந்தேகங்களை எழுப்புவதாகக் கூறியுள்ளார்.

எனவே, ராம்குமார் தற்கொலை குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில், நீதி விசாரணை நடத்த வேண்டுமென ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

ஜி.ராமகிருஷ்ணன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் தற்கொலை செய்து கொள்ளும் வரை, சிறை நிர்வாகம் என்ன செய்து கொண்டிருந்தது எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.

ராம்குமாருக்கு சிறை நிர்வாகம் உரிய பாதுகாப்பு அளிக்கவில்லையா என சந்தேகம் எழுப்பியுள்ள ஜி.ராமகிருஷ்ணன், ராம்குமார் மரணம் குறித்து உயர்மட்ட நீதி விசாரணை நடத்த வேண்டுமென வலியுறுத்தி உள்ளார்.

ஜி.கே.வாசன்

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராம்குமார் மரணம், சிறைச் சாலையில் கைதிகளைக் கண்காணிக்க வேண்டிய காவலர்களின் அலட்சியப் போக்கையும், போதிய பாதுகாப்பற்ற தன்மையையும் எடுத்துக் காட்டியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

விசாரணை நடந்து வந்த நிலையில் ராம்குமார் சிறையில் தற்கொலை செய்து கொண்டது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ராம்குமார் மரணம் குறித்த உண்மை நிலையை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டியது தமிழக அரசின் கடமை என்றும் ஜி.கே. வாசன் வலியுறுத்தி உள்ளார்.

திருமாவளவன்

ராம்குமாரின் சாவில் மர்மம் இருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நீதித்துறை மற்றும் சிறைத்துறையின் கவனக்குறைவாலேயே இந்த மரணம் நடைபெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.

ஜவாஹிருல்லா

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், ராம்குமாரின் மரணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாகத் தெரிவித்துள்ளார்.

அரசு நிர்வாகத்தின் மெத்தனப் போக்கால் ராம்குமார் மரணம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். ராம்குமார் மரணத்திற்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டுமென கூறியுள்ள ஜவாஹிருல்லா, இது தொடர்பாக உயர் நிலை விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்றும் வலியுறுத்தி உள்ளார்.

தொல். திருமாவளவன்

ராம்குமார் இறப்பிற்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும். இதில் எதனையும் மூடி மறைக்காமல், அவரது மரணம் தற்கொலை தான்? என்பதை உறதிப்படுத்தும் வகையில் பல்வேறு விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என கூறியுள்ளார்.

வைகோ

ராம்குமார் சிறையின் உள்ளே கட்டுக்காவல்களை மீறி, சமையல் அறைக்குச் சென்று மின் கம்பியை கடித்து, தன் உடலில் தானே மின்சாரத்தைப் பாய்ச்சி தற்கொலைக்கு முயன்றார் என்று கூறப்படுவது நம்பும் படியாக இல்லை.

அப்படி எனில் புழல் சிறையில் கண்காணிப்புகள் இல்லாமல்தான் கைதிகள் இருக்கின்றனரா? சிறைக் கைதி ஒருவர் தற்கொலை செய்து கொள்ளும் வரை காவலர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்களா? சிறையில் நடந்த இந்தச் செயலுக்கு சிறைத்துறை அதிகாரிகள்தான் பொறுப்பேற்க வேண்டும்.

ஒரு முக்கியமான கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் சிறையில் தற்சொலை செய்து கொண்டார் என்று அரசு தரப்பில் கூறப்படுவதை எந்த வகையிலும் ஏற்க முடியாது. சுவாதி கொலை வழக்கின் பின்னணி குறித்தும், சிறையில் ராம்குமார் தற்கொலை குறித்தும், உயர்நீதிமன்றத்தில் பணியில் உள்ள நீதிபதியைக் கொண்டு முழு விசாரணை நடத்தி உண்மைகளை வெளிக்கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments