வெற்றியை தேடித்தந்த பின்னர் தான் கண்ணை மூடுவேன்: கருணாநிதி சபதம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

திமுக சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பேசிய கருணாநிதி, நான் எந்த வயதானாலும், எந்த ஒரு இலட்சியத்தை தமிழகத்திலே ஈடேற்ற வேண்டும் என்று கருதினேனோ, அந்த லட்சியத்தை, அந்த மாபெரும் வெற்றியை இந்த இயக்கத்திற்கு தேடித் தந்துவிட்டுத்தான் கண்ணை மூடுவேன் என கூறியுள்ளார்.

நான் கஷ்டப்படுவது நம்முடைய தம்பிமார்களுக்கு பொறுக்கவில்லை. இப்படி கஷ்டப்பட்டு பேசுகிறாரே, என்று எண்ணுகிறீர்கள். நீங்கள் எண்ணுகிற எண்ணம் தூய்மையானது எனக்குத் தெரியும். என்னால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு , உங்களுக்காக உழைப்பேன் .

என்னுடைய உற்றார் உறவினர். நண்பர்கள், பேராசிரியர் போன்றவர்கள் எடுத்துச் சொன்னாலும் கூட, நான் ஓய்வு பெற மாட்டேன் .

நான் மறந்தும் ஓய்வெடுத்துக்கொள்வேன் என்று சொல்ல மாட்டேன். எப்போதும் நான் உங்களுக்கு வேலைக்காரன்.

எப்போதும் நான் உங்களுக்காக பாடுபடக்கூடியவன். இந்த இயக்கத்தை திருவாரூரிலிருந்து திருக்குவளை என்ற சின்னஞ்சிறு கிராமத்தில் தமிழ்க்கொடி காட்டி ஆரம்பித்தபோது, எந்த வலுவான, எந்த உறுதியான நிலை என் நெஞ்சிலே இருந்ததோ அதே உணர்ச்சியோடுதான் இந்த 93 -வது வயதிலும் இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டி - 93 வயது ஆகி விட்டதே என்று நீங்கள் யாரும் பெருமூச்சு விட வேண்டாம். உங்களுடைய அன்புக்கு, உங்களுடைய பாசத்துக்கு என்றைக்கும் கட்டுப்பட்டவன் நான்.

அந்த வகையிலே அந்தப் பாசத்தோடு, அன்போடு எல்லோரும் சேர்ந்து இந்த இயக்கத்தை வளர்ப்போம், எல்லோரும் சேர்ந்து என்று சொல்வது வார்த்தைக்காக அல்ல - வார்த்தைக்காக அடுக்கிச் சொல்வது அல்ல - எல்லோரும் சேர்ந்து என்று சொல்வது, அத்தனை பேரும் அவரவர்களுக்குள் இடையிடையே எழுகின்ற பூசல்களெல்லாம் விட்டுவிட்டு, நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து, நாம் அனைவரும் தோழர்கள். அனைவரும் திராவிடர்கள்.

திராவிடர்களிலேயே செட்டியார், முதலியார், பிள்ளை என்ற பிரிவுகளிலே உள்ளவர்கள் அல்ல. திராவிடர்கள் - தமிழர்கள். அந்த தமிழனுக்காக நாம் வாழ்வோம்.

அவர்களுக்காக நாம் பணிபுரிவோம் என்று எடுத்துக்காட்டி, விருது பெற்ற அனைவரையும் பாராட்டி, இதுவரையிலே உங்களை சோதித்ததற்காக என்னை மன்னிக்க வேண்டும் என்று உங்களையெல்லாம் கேட்டுக்கொண்டு (இல்லை, இல்லை என குரல்). இந்த அளவில் எனது உரையை நிறைவு செய்கிறேன்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments