என்று தான் தமிழனுக்கு விடிவு? தொடரும் காவேரி நீர் அரசியல்

Report Print Raju Raju in இந்தியா

ஒரு பக்கம் ரியல் எஸ்டேட்காரர்கள் நிலத்தை பிளாட் போட்டு விற்கிறார்கள், இன்னொரு பக்கம் கர்நாடகத்துல காவிரி தண்ணீரை தர மறுக்கிறார்கள், நாங்கள் என்ன உணவுக்காக கையேந்தவா செய்கிறோம், எங்க உரிமையை தானே கேட்கிறோம், இது சினிமா வசனம் இல்ல, ஒவ்வொரு தமிழனோட மனதில் இருக்கும் வார்த்தையோட வ(லி)ரிகள்.

காவிரி நீர் விடயத்தின் வரலாறு

1960-1980 இந்த இடைப்பட்ட காலத்தில் கர்நாடகா அரசு நான்கு அணையை காவேரி நதியில் கட்டியது. இதன் காரணமாக தமிழ்நாடு தண்ணீருக்காக கர்நாடகத்தை சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதற்கு சட்டபடி தீர்வு காண உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு 1990ல் அணுகியது. காவேரி நீர் நடுவர் மன்றத்தை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் தலைவராக பிரதமர் இருக்க அறிவுறித்தியது.

22.11.1991 ல் உச்சநீதிமன்றம், நதி என்பது எல்லோருக்கும் பொதுவானது. அதை ஒரு மாநிலம் மட்டும் சொந்தம் கொண்டாடுவது தவறு என கர்நாடகா அரசின் தலையில் கொட்டியது.

ஆனால் அதை மதிக்காத அம்மாநில அரசு ஜூன், ஜூலையில் தண்ணீர் திறந்து விடாததால் தமிழகத்தில் 7 லட்சம் ஏக்கரில் விவசாயம் பாதித்தது. 45 சதவீதம் விவசாயத்தில் காவேரி நீர் பங்களிப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு வருடமும் தமிழகத்துக்கு 250 TMC தண்ணீர் வழங்க நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கர்நாடகா அரசு ஒரு முறை கூட சரியாக பின்பற்றியதில்லை. எப்போதும் அதற்கு குறைவான நீரையே தந்து எங்களுக்கே நீர் பற்றாகுறை என கதை சொல்லி வந்தார்கள்.

பின்னர் 2007 ல் காவேரி நீதிமன்றம் மொத்தமுள்ள 740 TMC தண்ணீரில் தமிழகத்துக்கு 419TMC யும், கர்நாடகத்துக்கு 270TMC தண்ணீர் என தீர்ப்பளித்தது.

இதன்படி ஒவ்வொரு வருடமும் தமிழகத்துக்கு 192 TMC தண்ணீர் திறந்தே ஆக வேண்டும். ஆனால் கர்நாடக அரசு தர மறுத்தது.

தமிழகத்தில் குறுவை சாகுபடி காலம் - ஏப்ரல் முதல் ஜூலை // சம்பா - ஆகஸ்ட் முதல் நவம்பர் // நவரை - டிசம்பர் முதல் மார்ச்.

கர்நாடகாவில் மழை பொய்த்து போகும் போது, காவேரி பிரச்சனை பெரிதாக வெடிக்கிறது.

நடுவர் மன்ற தீர்ப்பையும் மதிக்காமல், உச்சநீதிமன்ற தீர்ப்பையும் மதிக்காமல் இருந்தால் எப்படி இரு மாநில மக்கள் விவசாயம் பார்ப்பார்கள்? இரு மாநில உறவு எப்படி நன்றாக இருக்கும்? சமத்துவம் எப்படி பிறக்கும்?

எல்லா மாநில மக்களுக்கும் பசிக்கும், அரிசி பருப்பை தான் எல்லாரும் உண்ண வேண்டும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments