தமிழகத்தில் பந்த்: தலைவர்களின் நிலவரங்கள் என்ன? யார் யார் கைது?

Report Print Deepthi Deepthi in இந்தியா

காவிரி பிரச்னை காரணமாக கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து, தமிழகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

திமுக

சென்னை ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையம் நோக்கி தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் பேரணியாக சென்றனர்.

அங்கு, ரயில் மறியலில் ஈடுபட சென்ற ஸ்டாலின் மற்றும் தி.மு.க.வினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, காவிரி நீர் பிரச்னையில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுவதாக அவர்கள் அங்கு கோஷங்கள் எழுப்பினர். அதை தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.வினரை பொலிசார் கைது செய்து அங்கு தயாராக நிறுத்தி வைத்திருந்த பேருந்துகளில் ஏற்றி சென்றனர்.

ம.சுப்பிரமணியன்

இதேபோல், முன்னாள் சென்னை மேயர் ம.சுப்பிரமணி தலைமையில் தி.மு.க.வினர் சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

வைகோ

திருச்சி ரயில்வே சந்திப்பில், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு உள்ளிட்ட 500 பேர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ரயில் மறியலில் ஈடுபட முயன்ற வைகோ உள்ளிட்ட ம.தி.மு.க.வினரை பொலிசார் கைது செய்தனர்.

திருமாவளவன்

சென்னை பேசின்பிரிட்ஜ் அருகே தொல்.திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ரயில் மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது, அவர்களை மறித்த பொலிசார், திருமாவளவன் உள்ளிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்களை கைது செய்தனர்.

கனிமொழி

சென்னை அண்ணாசாலையில், தி.மு.க. எம்.பி. கனிமொழி தலைமையில் தி.மு.க. மகளிரணியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த போலீசார், கனிமொழி உள்ளிட்ட தி.மு.க. மகளிரணியினரை கைது செய்தனர்.

துரைமுருகன்

வேலூர் காட்பாடி ரயில் நிலையத்தில் பிருந்தாவன் ரயிலை, தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் துரைமுருகன் தலைமையில் தி.மு.க.வினர் மறிக்க மறியலில் ஈடுபட்டுனர். அப்போது, துரைமுருகன் உள்ளிட்ட தி.மு.க.வினரை பொலிசார் கைது செய்தனர்.

வேல்முருகன்

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தலைமையில் அக்கட்சியின் தொண்டர்கள், சென்னை சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, வேல்முருகன் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சித் தொண்டர்களை பொலிசார் கைது செய்தனர்.

கண்.இளங்கோ

ராமேஸ்வரம் தலைமை அஞ்சலகத்தை, தமிழர் தேசிய முன்னணியினர் மாநில செயலாளர் கண்.இளங்கோ தலைமையில்.முற்றுகையிட்டனர். அவர்களை பொலிசார் கைது செய்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments