திமுகவினருக்கு அருகதையில்லை என்று கூறிய ஜெயலலிதா: கொந்தளித்த ஸ்டாலின்

Report Print Jubilee Jubilee in இந்தியா

சட்டசபையில் காவலர்களுக்கு வீட்டு வசதி செய்து கொடுப்பது பற்றி ஸ்டாலின் கேட்ட கேள்விக்கு முதல்வர் ஜெயலலிதா கூறிய பதில் நேற்று அனலை கிளப்பியது.

சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசினார்.

ஸ்டாலின் பேசுகையில், கடந்த 2016-17ம் ஆண்டு கொள்கை விளக்கக் குறிப்பில் காவல்துறை வீட்டு வசதிக்காக ரூ.422 கோடியில் 2623 வீடுகள் கட்டப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

அதுபோல காவல்துறை அதிகாரிகளுக்கு ''உங்கள் சொந்த இல்லம்'' திட்டத்தின் கீழ் மாவட்ட தலைநகரங்களில் தலா 10 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்து வீடுகள் கட்டித்தரப்படும் என்று 2012ம் ஆண்டு முதல்வர் கூறியிருந்தார்.

இதில் சென்னை மேல கோட்டையூர் தவிர மற்ற 31 மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த ஜெயலலிதா, எதிர்க்கட்சித் தலைவருக்கு காவலர்களுக்கு வீட்டு வசதி செய்து கொடுப்பது பற்றி திடீரென்று அக்கறையும் கவலையும் வந்திருக்கிறது. அதைக் கேட்பதற்கான அருகதை திமுகவினருக்கு இல்லை. ஏன் என்று சொல்கிறேன் கேளுங்கள்.

எம்.ஜி.ஆர் அவர்கள் 1980ம் ஆண்டு காவல் துறை வீட்டு வசதிக்கழகம் என்ற ஒரு அமைப்பினை ஏற்படுத்தினார். ஆனால் 1989ம் ஆண்டு கருணாநிதி ஆட்சிப் பொறுப்பை ஏற்றபொழுது, முதல் வேலையாக அந்தக் காவல் துறை வீட்டு வசதிக்கழகத்தை கலைத்து இழுத்து மூடினார்.

பின்னர் 1991ம் ஆண்டில் நான் முதல்வராக பதவி ஏற்றபின்னர் காவல் துறை வீட்டு வசதிக் கழகத்தை மீண்டும் தொடங்கினேன் என்றார்.

இந்நிலையில் ஜெயலலிதா சொன்ன விளக்கத்திற்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்து, ஒட்டுமொத்தமாக எழுந்து 'அருகதை இல்லை' என்று சொன்னதற்கு கூச்சலிட்டனர்.

பதிலுக்கு அதிமுக எம்.எல்.ஏ.க்களும் எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சட்ட சபையில் கடும் அமளி ஏற்பட்டது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments